பொதுத் தேர்தலுக்காக இம்முறை இரு வாக்குச்சீட்டு வகைகள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் பொலன்னறுவை, மொனராகலை மற்றும் கேகாலை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு தனி நெடுவரிசை கொண்ட வாக்குச் சீட்டு வழங்கப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்தாா்.
அதேபோன்று பெரும் எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிடும் ஏனைய 19 தேர்தல் தொகுதிகளில் இரு நெடுவரிசைகள் கொண்ட வாக்குச் சீட்டுகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டாா்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
வாக்களிக்கும்போது தான் விரும்பும் ஒரு கட்சி அல்லது சுயேச்சைக் குழுவுக்கு முன்னாள் உள்ள கட்டத்தில் புள்ளடியிட வேண்டும். புள்ளடியிடுவது அவசியமாகும். எனவே, கட்சி அல்லது சுயேச்சைக் குழுவுக்கு வாக்களித்திருக்காவிட்டால் அந்த வாக்கு முழுமையாக நிராகரிக்கப்படும். ஒரு கட்சி அல்லது ஒரு சுயேச்சைக் குழுவுக்கு மாத்திரமே வாக்களிக்க முடியும்.
அதேபோன்று, பிரதான வாக்குகளை வழங்கியதன் பின்னர் மூன்று விருப்பு வாக்குகளை வழங்க முடியும். விருப்பு வாக்குகளை வழங்குவதற்காக வாக்குச் சீட்டின் கீழ் பகுதி ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த இடத்தில் அந்ததந்த மாவட்டங்களுக்கான வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு சமமான இலக்கங்கள் வழங்கப்பட்டிருக்கும். வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள விருப்பு இலக்கங்களையே அந்த எண்கள் குறித்து இருக்கின்றன.
ஆகவே, உங்களுக்கு விருப்பமான வேட்பாளருக்குரிய எண்ணின் மீது புள்ளடியிட முடியும். வாக்காளர்கள் விரும்பும் பட்சத்தில் 1-3 வரையான வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்களிக்க முடியும். வேட்பாளர்களுக்குரிய இலக்கங்களை அடையாளம் காண்பதற்காக, வேட்பாளர்களின் பெயர் பட்டியல்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வாக்களிக்கும் அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவுக்குரிய வேட்பாளர்களின் இலக்கங்களுக்கு மாத்திரமே வாக்களிக்க முடியும்.