இலங்கையில் 'லங்கா ஈ நியூஸ்' இணையத்தளத்துக்கான அணுகலை முடக்கும் உத்தரவை அரசாங்கம் நீக்கியுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த இணையத்தளத்தை முடக்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டிருந்தார்.
இலண்டனில் இருந்து இயங்கும் 'லங்கா ஈ நியூஸ்' இணையத்தளம் 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் திகதி தடை செய்யப்பட்டது. இதற்குக் காரணம் 'லங்கா ஈ நியூஸ்' இணையத்தளம் வெளியிட்ட செய்தியால் ஜனாதிபது சிறிசேன கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
இலங்கை நிபுணத்துவ ஊடகவியலாளர்கள் சங்கம், நிபுணத்துவ இணைய ஊடகவியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகள் பலவும் இந்தத் தடை தொடர்பில் கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சரவையில் இருந்த நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவும் அப்போது 'லங்கா ஈ நியூஸ்' முடக்கப்பட்டமைக்கு எதிராக பகிரங்கமாகத் தோன்றியமை அதில் மிகவும் தனித்துவம் வாய்ந்தது.