Our Feeds


Monday, November 4, 2024

Zameera

புதிய பாராளுமன்றத்துக்காவது அனுபவம் மிக்கவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும் - எரான் விக்கிரமரத்ன

இளைஞர், யுவதிகள் பாரிய எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர். ஆனால், அவர்களது எதிர்பார்ப்புக்கள் சிதறடிக்கப்பட்டுள்ளன. எனவே, புதிய பாராளுமன்றத்துக்காவது அனுபவம் மிக்கவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த தேர்தல்களில் கொலை குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களைக் கூட மக்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்திருந்தனர். எனவே, இம்முறை அவ்வாறான தவறான தெரிவுகளுக்குச் செல்வதை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

இளைஞர், யுவதிகள் மாற்றம் வேண்டும் என சிந்திக்கின்றனர். அதற்கமைய பாரிய எதிர்பார்ப்புக்களுடனேயே அவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்திருந்தனர். ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கள் தற்போது இழக்கப்பட்டுள்ளன. எதிர்கால சந்ததியினரின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.

அதற்கு அனுபவமும் கல்வியறிவும் உள்ளவர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட வேண்டும். அரச ஊழியர்களுக்கு சந்தைக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு வழங்கப்படும்போது மூளைசாலிகள் வெளியேற்றம் நடக்காது. அரச ஊழியர்கள் தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுவர். இது குறித்து ஜனாதிபதியும் அரசாங்கமும் கவனம் செலுத்துவது சிறந்தாகும்.

பராட்டே சட்டத்தை டிசம்பர் 15 வரை இடைநிறுத்துவது தொடர்பான தீர்மானத்தை சமகால பொருளாதார நிலமைகளை கருத்திற் கொண்டு மேலும் நீடிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதியிடமும் நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கிறது.  

நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்களுக்கும் நாட்டின் பொருளாதார ஸ்திரத்துக்கும் வளர்ச்சிக்கும் இது பயனளிக்கும் என்றார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »