கடந்த ஒன்பது மாதங்களாக தமக்கான ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறி கொழும்பு துறைமுக நகரில் பணிபுரியும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நேற்று (07) பதாதைகளை ஏந்தியவாறு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீனாவின் துறைமுக நிறுவனத்தின் கீழ் உள்ள தாங்கள் பணிபுரியும் நிறுவனம், தங்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என்று போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.
இது தொடர்பில் போராட்டக்காரர்கள் தெரிவிக்கையில்,
“கொழும்பு துறைமுக நகர நிறுவனத்திலிருந்து சீனா துறைமுக நிறுவனத்தின் மீது பழியை நகர்த்திக்கொண்டே இருக்கிறார்கள். இன்றோ நாளையோ சம்பளம் தருகிறோம் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் 08 முதல் 09 மாதங்களுக்கும் மேலாக எங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. நம் குடும்பங்களுக்கு எப்படி உணவளிப்போம்? கொழும்பு துறைமுக நகரத்தில் பணியாற்றும் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் 300 தொடக்கம் 400 வரையான ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை இந்தப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண விரும்புகிறோம்” என்று அவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.