Our Feeds


Wednesday, November 20, 2024

SHAHNI RAMEES

உண்மையில் ஜனாதிபதி அனுர ஒரு மந்திரவாதி தான்! ; கம்மன்பில

 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆதரவை முழுமையாக பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாயாஜால வித்தைக்காரர் என்றே குறிப்பிட வேண்டும். பொதுத்தேர்தலில் தமிழர்களின் ஆதரவை பெற்று ஜனாதிபதி வரலாற்றில் இடம் பிடித்துள்ளதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.


கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,





இலங்கை பொதுத்தேர்தல் வரலாற்றில் தனித்த அரசியல் கட்சி ஒன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனித்து வெற்றிப் பெற்றுள்ளமை இதுவே முதல் தடவையாகும். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் ஆதரவை முழுமையாக வென்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளதை வெளிப்படையாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும்.


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதித் தேர்தலை காட்டிலும் பொதுத்தேர்தலில் அதிகளவான வாக்குகளைப் பெற்று அமோக வெற்றிப் பெற்றுள்ளது. நான் மாயாஜால வித்தைக்காரரல்ல என்று ஜனாதிபதி குறிப்பிட்டமை முற்றிலும் பொய்யானது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆதரவை பெற்றுள்ள ஜனாதிபதி உண்மையில் மாயாஜால வித்தைகாரர் என்றே குறிப்பிட வேண்டும்.


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஒட்டுமொத்த மக்களின் ஆதரவையும் பெற்று ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தி உள்ளதற்கு நன்றியும், அரசாங்கத்துக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அரசாங்கத்தை கைப்பற்றுவற்காக பொதுத்தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும் என்பதையே தொடர்ந்து வலியுறுத்தினோம்.


இந்த மாதம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை 2025 மார்ச் மாதத்துக்கு பின்னர் சமர்ப்பிப்பதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தில் இருந்து விலகி பொருளாதார நெருக்கடிகளை தோற்றுவிப்பதா ? அல்லது செயற்திட்ட பரிந்துரைகளை செயற்படுத்தி அரசியல் நெருக்கடிகளை தோற்றுவிப்பதா? என்பதில் ஒன்றை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும்.


உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பின்னர் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தேர்தலில் தோல்வியடைந்ததை ஏற்றுக் கொள்கிறேன். எளிமையான வாழ்க்கையை வாழ்கிறேன். கிழமையில் இரண்டு நாட்கள் நீதிமன்றத்துக்கு செல்வேன். மிகுதி நாட்கள் செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுபடுவேன் என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »