Our Feeds


Tuesday, November 12, 2024

Zameera

சொகுசு வாகனத்தை ஒப்படைத்த சுஜீவ!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேமசிங்கவிடம் இருந்த சர்ச்சைக்குரிய  V8 வாகனம் நேற்று (11) மாலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வாகனத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வசம் இருக்கும் வாகனம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவிடம் இருந்த, வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தது தொடர்பான வழக்கின் வழக்கு பொருளாகும் என  குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. .

சட்டவிரோதமாக ஒன்றிணைக்கப்பட்ட  டொயோட்டா V8 சொகுசு வாகனம் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலின் படி, வலான ஊழல் தடுப்புப் பிரிவினர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் வீட்டை நவம்பர் 2ஆம் திகதி சோதனையிட்ட போதும், சந்தேகத்திற்குரிய வாகனம் அங்கு காணப்படவில்லை.

பின்னர் கொள்ளுப்பிட்டியில் உள்ள சுஜீவ சேனசிங்கவுக்கு சொந்தமான வீடொன்றில் குறித்த சொகுசு வாகனம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அங்கு கண்டு பிடிக்கப்பட்ட வாகனத்தை  அரச பகுப்பாய்வாளரிடம் ஒப்படைத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டார்.

குறித்த  உத்தரவின் பேரில் சுஜீவ சேனசிங்க குறித்த வாகனத்தை அரச பகுப்பாய்வாளரிடம் ஒப்படைத்தார்.

அதன் பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொது முறைப்பாடுகள் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணை அறிக்கையின் ஊடாக விசாரணைகளின் முன்னேற்றத்தை கோட்டை நீதவான் நீதிமன்றில் நேற்று அறிவித்தனர்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »