வெறுப்பு, கோபம் அற்ற அரசியலை நாடு கொண்டிருக்க வேண்டிய காலம் வந்துள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
நாட்டில் மீண்டும் இனவாதம் ஏற்பட இடமளிக்கக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே திலித் ஜயவீர இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
“எமது மதத்தையோ, தர்மத்தையோ, நாகரீகத்தையோ நாடாத இனவாத விதை இந்த நாட்டில் துளிர்விட்டால், உடனடியாக அதை நசுக்கி, இந்த நாட்டிலிருந்து இனவாதத்தை ஒழிக்க வேண்டும்.
அதேநேரம் வடக்கிற்குச் சென்று தெற்கில் இன்னொன்றைப் பேசும் தற்போதைய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
மாறாக, நமது அன்பான அரசியலை மண்ணில் விதைக்க வேண்டும்.
அரசியலில், வெறுப்பு மற்றும் கோபத்திலிருந்து விடுபட்ட நாம் அனைவரும் இணைந்து ஒரு வேலையைச் செய்ய விரும்புகிறோம்.
ஆனால் ஒன்றை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்.
இந்த நாட்டின் அப்பாவி மக்களின் வாக்குகளால் இவர்கள் அனைவரும் பதவிகளுக்கு செல்கின்றனர்.
அந்த மக்களுக்கு என்ன நடந்தது என்று பார்க்காத, அந்த மக்களின் வாழ்க்கையை பார்க்காத அரசியல் முடிவுக்கு வர வேண்டும்.
இந்த தாய்நாட்டுக்காக நாங்கள் அணியும் பதக்கத்தின் முன் உங்கள் புள்ளடியையிடுமாறு கோருகிறோம்" என்றார்.