யாழ் ராணி சேவை மறு அறிவித்தல்வரை நடைபெறாது என புகையிரத திணைக்கள வட்டாரங்கள் அறிவித்துள்ளன.
என்ஜின் பழுதடைந்து அனுராதபுரத்தில் நிற்பதால் இந்தச் சேவையை நடாத்த முடியாதிருப்பதாக பிராந்திய புகையிரத முகாமையாளர் அறியத்தந்தார்.
அதனை இரத்மலானைக்கு அனுப்பியே சீர்செய்ய முடியும் என்றும், அதற்கு எத்தனை நாள் எடுக்கும் எனக் கூற முடியாது எனவும் அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவராக இருந்த காலப்பகுதியில், அவரது தீவிர முயற்சியால் இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணத்திலிருந்து தினமும் கிளிநொச்சி மாவட்டத்துக்கு தொழில் நிமித்தம் பயணிக்கும் அரச சேவையாளர்கள், தனியார்துறை பணியாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பணியாளர்கள், மாணவர்களின் நலன் கருதி, 2022 ஜுலை மாதம் 11ம் திகதி இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
அறகலய போராட்டம் தெற்கில் உச்சமடைந்து, போக்குவரத்து அமைச்சரும் இராஜினாமாச் செய்த நிலையிலும், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தற்றுணிவான நடவடிக்கையால், திட்டமிட்டபடி குறித்த தினத்தில் அந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
வடக்கின் முதலாவது பிராந்திய புகையிரத சேவையாக, காங்கேசன்துறை முதல் அறிவியல்நகர் வரையில் நடாத்தப்பட்ட இந்தச் சேவை, யாழ்-கொழும்பு புகையிரத சேவை தடைப்பட்டிருந்த காலத்தில் அனுராதபுரம் வரையில் நீடிக்கப்பட்டு, வடக்கில் தடையின்றிய புகையிரத சேவையாக தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இடையிடையே பல்வேறு காரணங்களால் இந்தச் சேவை நெருக்கடிகளைச் சந்தித்தபோதிலும், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலையீட்டினால் சேவை தடைப்படாமல் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இறுதியாக, கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இதுபோல் ஒரு இடையூறு ஏற்பட்டபோது, கிளிநொச்சிக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வருகை தந்திருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹவுடன் பேசி, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ஒரே நாளில் நிலைமை சீராக்கப்பட்டிருந்தது.
இப்போது இந்தச் சேவை தடைப்பட்டிருப்பதால் தினமும் கிளிநொச்சிக்கு தொழில் நிமித்தம் பயணம் செய்யும் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.