கொக்கெய்ன் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உட்பட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி துறைமுக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (05) காலை தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ நுழைவாயிலுக்கு அருகில் அக்மீமன பொலிஸ் அதிகாரிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனையின் போது சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கார் கொழும்பில் இருந்து வந்துள்ளதுடன், 277 கிராம் எடையுடைய 19 கொக்கெய்ன் போதை மாத்திரைகள் அடங்கிய பொதியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24 மற்றும் 32 வயதுடைய தல்பே பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
மேற்படி சந்தேக நபர்களுக்கு கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள வெளிநாட்டவர் ஒருவரினால் இந்த போதைப்பொருள் வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதன்படி நேற்று பிற்பகல் பொரளை பிரதேசத்தில் மேற்படி சந்தேக நபர்களுக்கு கொக்கேய்ன் போதைப்பொருளை வழங்கிய வெளிநாட்டு பிரஜையை 672 கிராம் எடையுடைய 40 கொக்கெய்ன் போதை மாத்திரைகளுடன் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதன்போது, அவரிடம் இருந்து 500 அமெரிக்க டொலர்கள் மற்றும் சில வெளிநாட்டு நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் 04 கிராம் 700 மில்லிகிராம் கொக்கேய்னுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டு சந்தேக நபர் 52 வயதுடையவர் எனவும் மற்றைய சந்தேக நபர் 28 வயதுடைய பொரளையை வசிப்பிடமாக கொண்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி துறைமுக பொலிஸார் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.