தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு
ஏற்கனவே கட்சிகளால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் அல்லது சமீபத்திய பொதுத் தேர்தலில் தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கப்பட்டு தெரிவு செய்யப்படாதவர்கள் மட்டுமே தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக பாராளுமன்றத்திற்கு பெயரிட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் நேற்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியல் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளுக்கு அமைவாக தேசியபட்டியல் ஆசனங்களின் ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் தங்களது தேசியப்பட்டியலை சமர்ப்பித்துள்ளன.
அவ்வாறான நிலையில், அக்கட்சிகள் தமது தேசியப்பட்டியல் ஊடாக தெரிவாகும் உறுப்பினர்களை இறுதி செய்து எமக்கு அறிவிக்க வேண்டும். அவர்கள் தேசியப் பட்டியலில் உள்ளவர்களையோ அல்லது தேர்தலில் போட்டியிட்டு தெரிவுசெய்யப்படாத வேட்பாளர்களையோ உறுப்பினர்களாக அறிவிக்க முடியும்.
அதனைத் தாண்டி வேறு எவரையும் அவர்களால் பெயரிட முடியாது. தேசியப்பட்டியலுக்காக பெயரிடப்படுபவர்கள் பட்டியல் கட்சியின் செயலாளரால் எமக்கு குறித்துரைக்கப்படும் என்றார்.