Our Feeds


Tuesday, November 19, 2024

SHAHNI RAMEES

அனுர அரசு முஸ்லிம் மக்களின் உணர்வுகளைப் புரியாது செயற்படுவது கவலையைத் தருகின்றது - இம்ரான் எம்.பி

 


இந்த அரசு முஸ்லிம் மக்களின் உணர்வுகளைப்

புரியாது செயற்படுவது கவலையைத் தருகின்றது - இம்ரான் எம்.பி

-------------------------------------------------


இந்த அரசாங்கம் முஸ்லிம் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாது செயற்படுவது மிகவும் கவலையைத் தருகின்றது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள இம்ரான் மகரூப் தெரிவித்தார்.


ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியதாவது, 


முஸ்லிம் மக்களும் இந்நாட்டின் பிரசைகள். அந்த வகையில் இந்த சமுகமும் ஏனைய சமுகங்களைப் போன்று கௌரவத்துடன் இந்நாட்டில் வாழ விரும்புகின்றது. இந்நாட்டின் சுதந்திர காலம் தொட்டு  நியமிக்கப்பட்டு வந்த அமைச்சரவையில் முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவம் இருந்து வந்துள்ளது. 


இலங்கை அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக இந்த அரசாங்கம் நியமித்த அமைச்சரவையில் முஸ்லிம் சமுகத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் சமுகம் மிகுந்த கவலை கொண்டுள்ளது. சமுக வலைத்தளங்களை அவதானிக்கின்ற போது இதனைப் புரிந்து கொள்ள முடிகின்றது. 


இந்த அரசாங்கத்தின் கடந்த குறுகிய கால செயற்பாடுகள் சிலவற்றை பாரக்கும் போது முஸ்லிம்கள் தொடர்பான வித்தியாசமான எண்ணம் இந்த அரசாங்கத்திற்கு இருக்கின்றதோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது.


இலங்கையில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற கிழக்கு மாகாணத்தில் அந்த மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட 6 தவிசாளர் பதவிகளில் எந்தவொரு முஸ்லிம் தவிசாளரும் நியமிக்கப்படவில்லை. இந்த விடயம் பேசு பொருளான பின்னர் ஒரு முஸ்லிம் தவிசாளர் நியமிக்கப்பட்டுள்ளார். 


அதேபோல இந்த அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெற்ற 18 தேசியப்பட்டியல் ஆசனங்கள் தொடர்பான பெயர்ப் பட்டியல் முன்னர் வெளியிடப்பட்ட போது எந்தவொரு முஸ்லிம் உறுப்பினரதும் பெயர் வெளிவரவில்லை. பின்னர் இதுவும் பேசுபொருளான பின்னர் ஒரு முஸ்லிம் உறுப்பினரது பெயரோடு புதிய பட்டியல் வெளியானது. 


அந்த வரிசையிலேயே இப்போது இந்த அரசாங்கம் நியமித்துள்ள அமைச்சரவையில் இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாது செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேசத்தை விதைத்து ஆட்சிக்கு வந்த கோத்தாபாய ராஜபக்ஸ அரசாங்கத்தின் அமைச்சரவையில் கூட முஸ்லிம் பிரதிநிதித்துவம் இருந்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.


இந்த உதாரணங்களை வைத்து நோக்கும் போது இந்த அரசாங்கத்திற்கு முஸ்லிம்கள் தொடர்பான வித்தியாசமான எண்ணம் இருப்பது போலவே எனக்குத் தோன்றுகின்றது. இப்படியிருந்தால் இந்த ஆரம்பத்திலேயே இது கலையப்பட வேண்டும். இந்த அரசாங்கத்தோடு இணைந்திருக்கின்ற முஸ்லிம்கள் இந்தப் பணியைச் செய்ய வேண்டும்.


நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் அளிக்கப்பட்டுள்ள சுமார் 15 இலட்சம் முஸ்லிம் வாக்குகளுள் சுமார் 10 இலட்சம் முஸ்லிம் வாக்குகள் திசைகாட்டிக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அளிக்கப்பட்டுள்ள வாக்கு விபரங்களை நுணுகி ஆராய்கின்ற போது இந்த உண்மையை விளங்கிக் கொள்ளலாம். 


முஸ்லிம்களின் இந்தளவு பெரிய எண்ணிக்கை வாக்குகளைக் கொடுத்து உருவாக்கப்பட்ட இந்த அரசாங்கம் முஸ்லிம் மக்களின் உணர்வுகளையும் புரிந்து செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெவித்தார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »