ஜப்பானில் ஆளும் லிபரெல் டெமாக்ரடிக் கட்சியின்
ஷிகெரு இஷிபா நேற்று (11) நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.ஜப்பான் பாராளுமன்றத்துக்கு கடந்த 27 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 465 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையை இழந்தது.
இதையடுத்து, புதிய பிரதமரைத் தெரிவு செய்வதற்காக பாராளுமன்ற சிறப்புக் கூட்டம் நேற்று (11) நடைபெற்றது. இதில், நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரதமராக ஷிகெரு இஷிபா மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.
மீண்டும் பிரதமரானதைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சர் டகேஷி இவயா, பாதுகாப்பு அமைச்சர் ஜென் நகாடனி, தலைமை அமைச்சரவை செயலர் யோஷிமசா ஹயாஷி உள்ளிட்ட தனது முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றவர்களையே அந்தப் பதவிகளுக்கு இஷிபா நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.