Our Feeds


Wednesday, November 13, 2024

SHAHNI RAMEES

வாக்களிக்க விடுமுறை வழங்காவிட்டால் ஒரு மாதகாலம் சிறை - பெப்ரல் அமைப்பு எச்சரிக்கை!


இடம்பெறும் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க

செல்ல விடுமுறை வழங்காத நிறுவனங்கள் தொடர்பாக எமக்கு முறைப்பாடு வந்திருக்கிறது. அவ்வாறு விடுறை வழங்காவிட்டால் நிறுவனத்தின் பிரதானிக்கு ஒரு மாதகாலம் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ராேஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.


பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க விடுமுறை வழங்குவதில்லை  என்ற முறைப்பாடு தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


இடம்பெறும் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க செல்வதற்கு விடுமுறை வழங்குவதில்லை என்ற முறைப்பாடு எமக்கு கிடைத்திருக்கிறது. அவ்வாறு எந்த நிறுவனமாவது, தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளதன் பிரகாரம், வாக்களிக்க செல்ல இருக்கும் தூரத்துக்கு அமைய வாக்களிக்க செல்ல விடுமுறை வழங்காவிட்டால், நிறுவனத்தின் பிரதானிக்கு ஒரு மாதகாலம் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அல்லது ஒரு இலட்சம் ரூபா தண்டம் விதிக்கப்படலாம். சில சந்தர்ப்பங்களில் இரண்டும் விதிக்கப்படலாம். அதனால் மக்களின் அடிப்படை உரிமையை பாதுகாக்க அனைவரும் கடமைப்பட்டுள்ளனர்.


அத்துடன் தேர்தல் பிரசார பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் பல்வேறு வழிகளில் கட்டணம் செலுத்தப்பட்ட தேர்தல் விளம்பரங்கள் பிரசுமாகி வருகின்றன. நேற்று முன்தினம் வரை இதுதொடர்பாக 580 விளம்பரங்கள் பிரசுமாகி இருப்பது தொடர்பில் எமக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு நாங்கள் முறையிட்டிருந்தோம். தற்போது அது 80வீதம் வரை குறைவடைந்துள்ளது. இது தவிர தனிப்பட்ட முறையில் சமூகவலைத்தலங்களில் தேர்தல் பிரசாரங்கள் இடம்பெற்று வருகின்றன. அது தொடர்பாகவும் நாங்கள் அதானம் செலுத்தி வருகிறோம்.


அதேவேளை, ஜனாதிபதி தேர்தலுடன் வன்முறைகள் நிறைந்த இந்த நாட்டின் தேர்தல் கலாசாரத்தில் தெளிவானதொரு மாற்றத்தை காணக்கூடியதாக இருந்தது. அது இந்தமுறை பாராளுமன்ற தேர்தல் பிரசாரங்களிலும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த தேர்தல் நடவடிக்கைகளின்போதும் மோதல் சம்பவங்கள் மிகவும் குறைவாகவே பதிவாகியுள்ளன. வவுனியாவில் இடம்பெற்ற மோதல் சம்பவம் மற்றும் மொனராகலையில் வேட்பாளர் ஒருவர் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளமை போன்ற சம்பவங்களே இடம்பெற்றுள்ளன.


அதனால் தேர்தல் கலாசாரம் குறிப்பிடத்தக்களவில் நல்ல நிலைக்கு வந்துள்ளது. அதேபோன்று அரச அதிகாரத்தை பயன்படுத்தல் மற்றும் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தல்  போன்ற விடயங்களும் இந்த பாராளுமன்ற தேர்தலில் குறிப்படக்கூடிய அளவில் இடம்பெறவில்லை. அதனால் தேர்தல் கலாசாரத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தைப்போன்று அரசியல் கலாசரத்திலும் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கான முதலாவது அடித்தளத்தை மக்கள் இந்த பாராளுமன்ற தேர்தலில் முன்னெக்க வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »