இந்நாட்டில் விவசாயம், கல்வி, சுற்றுலா மற்றும் பொதுச் சேவை மேம்பாட்டுக்கு தேவையான தொழில்நுட்ப உதவி மற்றும் நிதி வசதிகளை வழங்க நெதர்லாந்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
நெதர்லாந்தின் இலங்கைக்கான பிரதித் தூதுவர் இவான் ருட்ஜென்ஸ் உள்ளிட்ட நெதர்லாந்து தூதுக்குழுவினர், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை புதன்கிழமை (13) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடினர்.
நெதர்லாந்தில் உள்ள Wageningen பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (Wageningen University & Research) கடந்த 7 ஆண்டுகளாக உலக பல்கலைக்கழக தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ள நிலையான பல்கலைக்கழகமாக பெயரிடப்பட்டுள்ளது.
விவசாயம், விவசாயம்-சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் இலங்கையின் முக்கிய பங்குதாரர்களுடன் இணைந்து புதிய ஒத்துழைப்பு திட்டங்களை ஆரம்பிக்க மேற்படி பல்கலைக்கழகம் எதிர்பார்த்துள்ளது.
அதற்கான வாய்ப்புகள் மற்றும் சவால்களை அறிந்துகொண்டு, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி போன்ற பலதரப்பு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை ஒத்துழைப்புடன் விளைச்சல் மற்றும் நிலையான உணவுக் கட்டமைப்புக்கான திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்துகிறது.
இதன்படி, இந்த நிகழ்ச்சித் திட்டங்களில் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படுவதுடன் தொழில்நுட்ப மற்றும் நிதி வசதிகளை வழங்கவும் நெதர்லாந்து பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்தனர்.
நெதர்லாந்து வகினின்கன் பல்கலைக்கழக ஆய்வு பீடத்தின் தலைவர் பேராசிரியர் வில்பர்ட் டொல்ப்ஸ்மா, வெகனிங்கன் பல்கலைக்கழக முகாமையாளர் கல்யான் சக்ரவர்த்தி , கலாசார ஆய்வுக் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பேராசிரியர் எட்வர்ட் ஹயின்ஜ்பென்ஸ்,,சொல்மிராய் நிறவன குழுமத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ரிகாடோ எப்டோல் மற்றும் ஷோமோ லபீசரன் ஆகியோருடன் ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் ரணில் டி சில்வா உள்ளிட்டவர்கள் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.