Our Feeds


Sunday, November 3, 2024

Zameera

நுவரெலியாவில் இனி அரசியல் சண்டித்தனங்களுக்கு இடமில்லை - ஜனாதிபதி


 நுவரெலியாவில் இனி அரசியல் சண்டித்தனங்களுக்கு இடமில்லை. மக்களை அடக்கி ஆளும் நிலையும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


நுவரெலியாவில் இன்று (03) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


ஜனாதிபதி தேர்தலின்போது நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்குகளை குறிவைத்து கட்சிகளின் தலைவர்கள் அடிக்கடி நுவரெலியா வந்தார்கள்.


தற்போது வருகின்றார்களா? இல்லை. ஏனெனில் அவர்கள் கொழும்பில் போட்டியிடுகின்றனர். கொழும்புக்கு வெளியில் வரமாட்டார்கள். ஆனால் நாம் அப்படியானவர்கள் அல்லர்.


வென்றாலும், தோற்றாலும் நாம் மக்களுக்காக நிச்சயம் வருவோம். அரசியலுக்காக நாம் மக்களை பிரித்தாள மாட்டோம்.


நுவரெலியாவில் வறுமை நிலை நிலவுகின்றது. சுகாதாரம், கல்வி உள்ளிட்ட விடயங்களில் பின்தங்கிய நிலை காணப்படுகின்றது.


பெருந்தோட்ட மக்களுக்கு தமக்கென நிலம் இல்லை. நிம்மதியான வாழ்வு இல்லை. ஆனால் ஆட்சியாளர்கள் சொகுசாக வாழ்ந்துவந்தனர்.


எனினும், கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது மக்கள் இணைந்து மக்களுக்கான அரசாங்கத்தை உருவாக்கியுள்ளனர். எனவே, மக்களுக்குரிய சேவைகள் நாம் உரிய வகையில் முன்னெடுப்போம்.


நுவரெலியாவில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியும். அதற்குரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. வரவு - செலவுத் திட்டம் ஊடாக அரசாங்க ஊழியர்களின் சம்பளம் நிச்சயம் அதிகரிக்கப்படும்.


ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அரசியல்வாதிகளின் வீண் செலவுகள் குறைக்கப்பட்டு, மக்கள் பணம் சேமிக்கப்படும். இது கொள்கை ரீதியிலான முடிவு. முன்னாள் ஜனாதிபதிகளை பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. என்று அவர் மேலும் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »