Our Feeds


Monday, November 25, 2024

SHAHNI RAMEES

வடக்கு, கிழக்கில் பிரபல்யமடைவதற்காக தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் - ரொஷான் ரணசிங்க

 



உலகில் 38 நாடுகளில் விடுதலை புலிகள் அமைப்பு

இன்றும் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 


வடக்கு மற்றும் கிழக்கில் பிரபல்யமடைவதற்காக தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.


பொலன்னறுவை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (24)  இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் தெரிவித்ததாவது,


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் ஆதரவு வழங்கியுள்ளதை முழுமையாக வரவேற்கிறோம். 


தெற்கு அரசியல் கட்சிக்கு வடக்கு மக்கள் ஆதரவளித்துள்ளமை சிறந்த அரசியல் மாற்றமாகும். தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எளிமையானவர், பாராளுமன்றத்துக்கு எளிமையான முறையில் வருகை தந்தார் என்று தற்போது ஜனாதிபதியின் புகழ்பாடுகிறார்கள். 


முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவும் தனது வீட்டில் இருந்து ஜனாதிபதி செயலகத்துக்கு சென்றார், எளிமையான முறையில் பாராளுமன்றத்துக்கு சென்றார். இறுதியில் நேர்ந்தது என்னவென்பதை மக்கள் அறிவார்கள்.


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணிகளை விடுவிக்கவும், இராணுவ முகாம்களையும், பாதுகாப்பு தடுப்புக்களை அகற்றவும் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. 


உலகில் 38 நாடுகளில் விடுதலை புலிகள் மீதான தடை இன்றும் அமுலில் உள்ளது என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிரபல்யமடைவதற்காக தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய அம்சங்களை பலவீனப்படுத்துவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். 


பாரிய இழப்புகளுக்கு மத்தியில் தான் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »