மாகாண சபைத் தேர்தல் முறைமையில் காணப்படும்
சட்ட சிக்கலுக்கு தீர்வு காண அனைத்து அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். அடுத்த ஆண்டு முதல் காலாண்டுக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்த எதிர்பார்த்துள்ளோம் என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துமாறு உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கோரப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்து புதிதாக வேட்புமனுக்களை கோரி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது பொருத்தமானதாக இருக்கும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஆண்டு முதல் காலாண்டில் நடத்த உத்தேசித்துள்ளோம். அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல்கள் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும்.
மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் காணப்படும் சிக்கல்களினால் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை.
விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது சிறந்ததாக அமையும்.
மாகாண சபைத் தேர்தல் குறித்து பாராளுமன்றத்தில் சகல அரசியல் கட்சிகளுடன் எதிர்வரும் காலங்களில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். பொது கொள்கையின் அடிப்படையில் நெருக்கடிகளுக்கு தீர்வு கண்டு வெகுவிரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது கட்டாயமாகும் என்றார்.