Our Feeds


Saturday, November 23, 2024

SHAHNI RAMEES

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கங்களுக்கமைய ஜனாதிபதி செயற்படக்கூடாது. - ஜயந்த சமரவீர



வடக்கு மக்கள் இனவாதம், பிரிவினைவாதத்தை முடிவுக்கு

கொண்டு வந்து தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்துள்ளார்கள். பிரிவினைவாதத்தை போசிக்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கங்களுக்கமைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செயற்பட கூடாது என தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.


தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் தெரிவித்ததாவது,


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது கொள்கை பிரகடனத்தில் இந்த நாட்டில் இனி இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் இடமில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி அண்மைகாலமாக இவ்வாறு குறிப்பிடுவதை அவதானிக்க முடிகிறது.


தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ள ஆணை அமோகமானது.  வடக்கு மக்கள் இனவாதம், பிரிவினைவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்கள்.  பிரிவினைவாதத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட்ட எம்.ஏ. சுமந்திரனையும் தோற்கடித்துள்ளார்கள். இருப்பினும் ஏனைய பிரிவினைவாதிகள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.


வடக்கு மக்கள் வழங்கியுள்ள இனவாதமற்ற ஆணையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கும் உண்டு.ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கனடா வாழ் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் யோசனைகளை முன்வைத்துள்ளன.


பிரிவினைவாதத்தை போசிக்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கங்களுக்கமைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செயற்பட கூடாது. வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு கொள்கை அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்.


இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த பல்வேறு தரப்பினர் அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கின்றனர். நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாத்த இராணுவத்தினரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கும் ,அரசாங்கத்துக்கும் உண்டு.


நாட்டின் ஒற்றையாட்சிக்கு முன்னுரிமை வழங்கி அரசாங்கம் செயற்பட வேண்டும். தேசியத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அரசாங்கம் தீர்மானங்களை எடுத்தால் சமூக கட்டமைப்பில் பாரிய நெருக்கடிகள் ஏற்படும். நாட்டின் நலன் கருதி அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவோம்.


புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. புதிய யாப்பு வரைவின் உள்ளடக்கம் குறித்து ஆராய்ந்து வருகிறோம். வெகுவிரைவில் அவற்றையும் பகிரங்கப்படுத்துவோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »