Our Feeds


Monday, November 25, 2024

SHAHNI RAMEES

போலி குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க புதிய சட்டமியற்ற வேண்டும் - நாமல் ராஜபக்ஷ


 அரசியல் களத்தில் முன்வைக்கப்படும் போலியான

குற்றச்சாட்டுக்களுக்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் புதிய சட்டமியற்றுவதற்கு தனிநபர் பிரேரணையை முன்வைக்கவுள்ளேன். எம் மீதான பொய்யான குற்றச்சாட்டுக்கள் தற்போதைய ஆட்சிமாற்றத்துக்கு ஒரு காரணம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.


மஹரக பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் தெரிவித்தார்.


அரசியல் களத்தில் தேர்தல் வெற்றிக்காக எவர் வேண்டுமானாலும் எதனையும் குறிப்பிடலாம் என்ற நிலைமை காணப்படுகிறது.வரையறையற்ற வகையில் சேறு பூசல்கள் இடம்பெறுகின்றன. தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை அனைவரும் மறந்து விடுகின்றனர்.


கடந்த காலங்களில் ராஜபக்ஷர்களிடம் 18 லம்போகினி வாகனங்கள் இருப்பதாகவும், உகண்டா நாட்டில் நிதியை பதுக்கி வைத்திருப்பதாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. ஜனாதிபதி தேர்தல் காலத்திலும் ராஜபக்ஷர்கள் உகண்டாவில் நிதியை பதுக்கி வைத்திருப்பதாக குறிப்பிட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பின்னர் அந்த குற்றச்சாட்டுக்கள் பொய் என்று குறிப்பிட்டார்.


 குறுகிய அரசியல் வெற்றிக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷர்கள் மீது பல போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.இவ்வாறான குற்றச்சாட்டுக்களினால் மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்கு ஆற்றிய சேவை மறக்கடிக்கப்பட்டு, அவபெயர் மாத்திரமே மிகுதியானது.


அரசியல் களத்தில் தேர்தல் வெற்றிக்காக முன்வைக்கப்படும் போலியான குற்றச்சாட்டுக்களுக்கு சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் பலமான சட்டமியற்றலுக்கு தனிநபர் பிரேரணை ஒன்றை எதிர்பார்த்துள்ளேன். ராஜபக்ஷர்கள் மீதான போலியான குற்றச்சாட்டுக்கள் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு பிரதான காரணியாகும்.


ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் பிரச்சார மேடைகளில் ராஜபக்ஷர்கள் மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமாக நிரூபிக்குமாறு ஜனாதிபதியிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளேன். உகண்டாவில் பதுக்கி வைத்திருப்பதாக குறிப்பிடும் நிதியை நாட்டுக்கு கொண்டு வந்து அரசுடமையாக்குங்கள்; முறையான விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »