Our Feeds


Saturday, November 2, 2024

SHAHNI RAMEES

ஈஸ்டர் தாக்குதல்கள் அறிக்கையை உடனடியாக வெளியிடுங்கள்! - ஹிருணிகா கோரிக்கை

 


எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் அபாயகரமான நிலைமைக்கான

ஒரு முன் அறிவிப்பாகும். தற்போதைய அரசாங்கத்துக்கு இது ஒரு சிறந்த முன்னறிவிப்பு இல்லை என்பது மாத்திரம் தெளிவாகிறது. 


எதிர்க்கட்சியின் உறுப்பினராக இருந்த போது கூறிய விடயங்களை நடைமுறைப்படுத்துவது எந்தளவு கடினமானது என்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தற்போது புரிந்து கொண்டிருப்பார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.


கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (01)  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,


எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் அபாயகரமான நிலைமைக்கான ஒரு முன் அறிவிப்பாகும். பிரதேசசபைக்கான தலைவரை தெரிவு செய்தல், வரவு - செலவு திட்டம் உள்ளிட்டவற்றை நிறைவேற்றிக் கொள்வதில் ஆளுங்கட்சி சவால்களை எதிர்கொள்ள வேண்டியேற்படும். 


ஓரிரு வாக்குகளால் இவை தீர்மானிக்கக் கூடிய சக்தியாக அமையும். எனவே தற்போதைய அரசாங்கத்துக்கு இது ஒரு சிறந்த முன்னறிவிப்பு இல்லை என்பது மாத்திரம் தெளிவாகிறது.


எதிர்க்கட்சியின் உறுப்பினராக இருந்த போது கூறிய விடயங்களை நடைமுறைப்படுத்துவது எந்தளவு கடினமானது என்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தற்போது புரிந்து கொண்டிருப்பார். பேசுவதைப் போன்று நடைமுறையில் செயற்படுத்துவது இலகுவானதல்ல.


எரிபொருள் விலைகள் தொடர்பிலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் உள்ளிட்டவை தொடர்பிலும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அவை எவற்றையும் தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை.


தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அறிக்கையை வெளியிடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். 


அதேபோன்று நாணய நிதியத்துடன் இந்த அரசாங்கம் எவ்வாறு பயணிக்கின்றது என்பதும் இரகசியமானதாகவே உள்ளது. அதனையும் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.


மறுபுறம் பெண்களின் உரிமைகள் தொடர்பில் குரல் கொடுத்த தேசிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர் லால் காந்த, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்லவின் மகள் மீது மோசமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 


தற்போதைய பிரதமரும் ஒரு பெண் என்ற ரீதியில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »