தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு பெறப்படும் மரக்கறிகளின் தொகை 60 % வீழ்ச்சியடைந்துள்ளதுடன், மரக்கறிகளை கொள்வனவு செய்ய வரும் விற்பனையாளர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு குறைந்து, மரக்கறிகளின் விலையும் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக பொருளாதார மைய வர்த்தகர்கள் சங்கம் கூறுகிறது.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்கத்தின் செயலாளர் ஐ.ஜி.விஜேனந்தா மேலும் தெரிவிக்கையில், மழை காரணமாக குறித்த வர்த்தக நிலையத்தில் தரமான மரக்கறிகள் விற்பனை செய்யப்படாமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன்படி, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு வெளி மாகாணங்களிலிருந்து வரும் மரக்கறிகள் மற்றும் கிராமப்புறங்களில் இருந்து வரும் மரக்கறிகளின் தொகை வெகுவாக குறைவடைந்துள்ளதாகவும், இதன் விலை மெல்ல மெல்ல 100 முதல் 140 ரூபா வரை உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
பெரும்பாலான தாழ்நில மரக்கறிகள் சந்தையில் கிடைப்பது அரிதாகவே காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், மரக்கறிகளின் சில்லறை விலை அதிகரிக்கலாமெனவும் சுட்டிக்காட்டினார்.
ஒரு கிலோ போஞ்சு 400 முதல் 420 ரூபா வரையிலும், ஒரு கிலோ கரட் மற்றும் லீக்ஸ் 130 முதல் 140 ரூபா வரையிலும், ஒரு கிலோ பூசணி நூறு ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மற்றும் ஒரு கிலோ பச்சை மிளகாய் 250 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.