Our Feeds


Friday, November 1, 2024

SHAHNI RAMEES

ஊடக சுதந்திரம் குறித்து பேசிய ஜனாதிபதி இன்று ஊடகங்களுக்கு அழுத்தங்களை கொடுக்க ஆரம்பித்துள்ளார் - சஜித்

 

ஜனநாயக நாட்டில் ஊடக சுதந்திரமானது முக்கியமானதொரு அங்கமாகும். ஒரு நாட்டின் ஊடகங்கள் ஜனநாயகத்தை பாதுகாக்கும் மிக முக்கியமான தூண்களில் ஒன்றாக பலர் ஏற்றுக்கொண்டாலும், அன்று ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க ஊடக சுதந்திரம் குறித்து பேசிய விடயங்கள், ஊடக உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்காக பேசினாலும், இன்று அவர் ஜனாதிபதியாகி ஊடகங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்க முற்படுகிறார் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.




2024 பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு மத்திய கொழும்பு மக்களுடனான சந்திப்பு நேற்றைய தினம் (31) ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் தலைவரான சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது. 

ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு தேர்தல் தேர்தல் தொகுதி அமைப்பாளர் முஜிபுர் ரஹ்மானால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பில் கட்சி செயற்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 

இதில் உரையாற்றியபோதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் கூறுகையில், 

ஜனநாயக நாட்டில் ஊடக சுதந்திரமானது முக்கியமானதொரு அங்கமாகும். ஒரு நாட்டின் ஊடகங்கள் ஜனநாயகத்தை பாதுகாக்கும் மிக முக்கியமான தூண்களில் ஒன்றாக பலர் ஏற்றுக்கொண்டாலும், அன்று ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க ஊடக சுதந்திரம் குறித்து பேசிய விடயங்கள், ஊடக உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்காக பேசினாலும், இன்று அவர் ஜனாதிபதியாகி ஊடகங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்க முற்படுகிறார். ஜனநாயகம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்தும் அவர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள். 

நமது நாட்டின் ஊடகத்துறைக்கு தற்போதைய ஜனாதிபதியோ அல்லது அரசியல்வாதிகளோ ஊடக சுதந்திரம் குறித்து ஆலோசனை வழங்கத் தேவையில்லை. 

ஜனநாயகத்தின் முக்கிய தூணாக விளங்கும் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஊடக சுதந்திரம் மற்றும் ஒழுக்கக் கோவை பேணப்பட வேண்டும். ஆனால், அது ஊடகங்களால் உருவாக்கப்பட்ட சுய கட்டுப்பாட்டு முறையின்படி அமைய வேண்டும். 

ஊடகங்களை கட்டுப்படுத்த சட்டங்களை இயற்றுமாறு ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ ஆலோசனை வழங்குவது, கண்டிப்பது ஊடக சுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் விடுக்கப்பட்ட மரண அடியாகும். 

ஊடகத்தை கண்டித்து அறிவுரை வழங்குவதை தவிர்க்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் கேட்டுக்கொள்கிறேன். 

ஊடகங்களின் கட்டுப்பாடு, சுயநிர்வாகம் என்பன ஊடகங்களுக்கே உரித்தான வேலை.

ஐக்கிய மக்கள் சக்திக்கும் எனக்கும் ஊடகங்களில் இருந்து விமர்சனத் தாக்குதல்கள் பரவலாக இடம்பெற்றது. என்றாலும் நான் ஒருபோதும் ஊடகங்களுக்கு எதிராக செயற்படவில்லை. அவ்வாறு செயற்படுவதற்கு எந்த உரிமையும் இல்லை.

மறுபுறம் எதிர்க்கட்சியொன்று தேவை இல்லை, அரசாங்கம் மட்டும் இருந்தால் போதும் என்ற கருத்தையும் இன்று முன்னெடுத்து வருகின்றனர். இவை ஜனநாயகத்துக்கு ஆபத்தை விளைக்கும் போக்குகள் ஆகும். 

எனவே, நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க, ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்க, இந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்நாட்டு மக்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மையைப் பெற்றுத் தர வேண்டும் என்பதை இங்கு சுட்டிக்காட்டுகின்றேன் என்றார். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »