நுவரெலியா மாவட்டத்தில் 5 ஆசனங்களை ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வெற்றி கொள்ளும் என முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய வேட்பாளருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
கந்தப்பளை கோட்லோஜ் தோட்டத்தில் நடைபெற்ற இறுதி தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து அங்கு பேசுகையில்,
தேர்தல் பிரசாரம் ஆரம்பித்த பொழுது அரசாங்கத்தின் செல்வாக்கு அதிகரித்து இருந்தது. ஆனால் கடந்த ஒரு மாத காலத்தில் செல்வாக்கு படிப்படியாக குறைவடைந்து தற்பொழுது நுவரெலியா மாவட்டத்தில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் மக்கள் மனதில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 5 ஆசனங்களை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.
அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலின் பொழுது பல வாக்குறுதிகளை வழங்கியதை நாம் மறந்துவிட முடியாது. ஆனால் அந்த எந்த ஒரு வாக்குறுதியையும் அரசாங்கம் இதுவரை செய்யவில்லை. குறிப்பாக பொருட்களின் விலை தற்பொழுது பாரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்த விலையேற்றத்தை மக்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
15ஆம் திகதி சஜித் பிரேமதாச பிரதமராக பதவியேற்பதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. நாடு பூராகவும் ஜனாதிபதி தேர்தலைவிட இந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி அதிகமான வாக்குகளை பெற்றுக் கொள்ளும். அதேநேரம் அதிகமான ஆசனங்களையும் பாராளுமன்றத்தில் பெற்றுக்கொள்ளும்.
இந்த தேர்தல் மலையக மக்களுக்கு மிகவும் சவாலான ஒரு தேர்தல். இந்த தேர்தலில் நாம் எமது பிரதிநிதித்துவத்தை இழந்துவிட்டால் எதிர்காலம் எமக்கு சவாலான ஒரு காலமாக அமைந்துவிடும். மாற்றத்தை நோக்கி சென்று ஏமாற்றத்தை நாம் அடைந்துவிடக்கூடாது. எனவே சிந்தித்து வாக்களியுங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நுவரெலியா நிருபர்