Our Feeds


Monday, November 11, 2024

Zameera

அரிசி விற்பனை 50% குறைந்துள்ளது


 சந்தையில் குறிப்பிட்ட சில வகை அரிசிகளின் தட்டுப்பாடு மற்றும் அதிக விலை காரணமாக அரிசி விற்பனை சுமார் 50% வரை குறைந்துள்ளதாக மரதகஹமுல அரிசி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கடந்த சில வாரங்களாக சந்தையில் அரிசியின் விலை கட்டுப்பாட்டு விலையை தாண்டி அதிகரித்ததுடன், நாட்டு அரிசிக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டது.

அதன்படி ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி ஜனாதிபதி பாரிய அரிசி ஆலை உற்பத்தியாளர்களை அழைத்து கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யுமாறு அறிவித்ததுடன் அவர்களும் அதற்கு இணங்கினர்.

அத்துடன், நாட்டிலுள்ள நெல் மற்றும் அரிசியின் கையிருப்பு குறித்த தரவு அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி வழங்கிய பணிப்புரைக்கு அமைய, நுகர்வோர் அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையும் ஜனாதிபதியிடம் கடந்த 06ஆம் திகதி கையளிக்கப்பட்டது.

ஆனால் சந்தையில் இன்னும் குறிப்பிட்ட வகை அரிசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், கிடைக்கும் அரிசி, கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கே விற்கப்படுவதாகவும் மக்களும் வியாபாரிகளும் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், நாட்டில் உள்ள நெல் மற்றும் அரிசி கையிருப்பு தொடர்பில் பெறப்பட்ட அறிக்கையின் பிரகாரம் போதியளவு நாட்டு அரிசி உள்ளதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் எம்.எம்.நைமுதீன் கூறுகிறார்.

அரிசியின் விலையை அதிகரிப்பதற்காக சில அரிசி ஆலை உரிமையாளர்கள் செயற்கையாக அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருவதாகவும், அடுத்த சில நாட்களில் இதற்கான தீர்வு வழங்கப்படும் என்றும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »