மியன்மாரில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 32 இலங்கையர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
08 பெண்கள் மற்றும் 24 ஆண்களை உள்ளடக்கிய 32 இலங்கையர்கள் இன்று Mae Sot எல்லை வழியாக பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அவர்களுக்கான நலன்புரித் தேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அவர்கள் விரைவில் நாட்டுக்கு திருப்பி அழைத்து வரப்படுவரென்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மியன்மார் மற்றும் தாய்லாந்து எல்லைக்கு இடையில் பயங்கரவாத குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள “சைபர் கிரிமினல் ஏரியா” எனப்படும் மூன்று முகாம்களில் இலங்கையர்கள் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
பயங்கரவாத வலையமைப்பினால் நடத்தப்படும் குறித்த முகாம்களில் இணையம் ஊடாக மக்களை ஏமாற்றி நிதி மோசடியில் அங்கு சிக்கியுள்ள இலங்கையர்கள் ஈடுபட வேண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கு இலங்கை அரசாங்கம் சர்வதேச குடியேற்ற அமைப்புடன் (IOM) கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தது.
மியன்மார் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களின் ஒருங்கிணைப்புடன் இரண்டு வெவ்வேறான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தால் இதற்கு முன்னர் தடுத்துவைக்கப்படிருந்த 28 இலங்கையர்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.