Our Feeds


Thursday, November 28, 2024

SHAHNI RAMEES

மட்டக்களப்பில் வெள்ளத்தால் 15 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு !

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் வியாழக்கிழமையும்

(28) மழை சற்ற ஓய்ந்துள்ள நிலையில் மாவட்டத்தின் பிரதான தரை வழிப்போக்குவரத்துக்கள் தற்போது வரையிலும் முற்றாகத் தடைப்பட்டுள்ளன. இதனால் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்வில் தழம்பல் ஏற்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.


மண்டூர் - குருமண்வெளி படகுப்பாதை, அம்பிளாந்துறை குருக்கள்மடம் படகுப்பாதைப் போக்குவரத்துக்கள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.


பட்டிருப்பு பெரியபோரதீவு பிரதான வீதி, மண்முனை கொக்கட்டிச்சோலை பிரதான வீதி, வவுணதீவு மட்டக்களப்பு நகர் பிரதான வீதி, உள்ளிட்ட பிரதான வீதிகளை ஊடறுத்து வெள்ளநீர் பாய்ந்துவருவதானல் அவ்வீதிகளுடனான தரைவழிப்போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன.


எனினும் மிக அவசரத் தேவைகளுக்காக மாத்திரம் ஒருசில இயந்திரப் படகுகள் சேவையிலீடுபடுவதையும், உழவு இயந்திரங்களில் மக்கள் பயணம் செய்து நகர்புறங்களுக்கு சென்றுதமக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதையும் காண முடிகின்றது.


இந்நிலையில் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த்தினால் 15900 குடும்பங்களைச் சேர்ந்த 49123 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


அவற்றில் 11890 குடும்பங்களைச் சேர்ந்த 37541 பேர் நண்பர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.  தற்போது வரையில் 56 பொதுஇடங்களில் 2558 குடும்பங்களைச் சேர்ந்த 7241 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், வெள்ளத்தினால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். 


“ வாழைச்சேனைப் பிரதேசத்திலே மீன்பிடிக்கச் சென்றுள்ளதாக கருதப்படும் 3 பேரை மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்காக எமது உத்தியோகஸ்த்தர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகின்றதாகவும், உதவி தவிர்ந்த ஏனைய பொருட்களையும் வழங்குவதற்கு அரச சார்பற்ற அமைப்புக்கள் தயாராகவுள்ளதாகவும், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் மாவட்ட அரசாங்க அதிபர், அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட ஏனைய அரச உத்தியோகஸ்த்தர்கள் ஒன்றிணைந்து பொது இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்கி வருவதோடு மக்கள் பிரதிநிதிகளும் பொது அமைப்புக்களும் வெள்ள அனர்த்த நிலமைகள் தொடர்பில் நேரில் கிராமங்களுக்குள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.


தொடர்ந்தும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நவகிரி, உன்னிச்சை, கித்துள்வெவ, வெலிக்காக்கண்டிய, உறுகாமம், உள்ளிட்ட குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய சிறிய குளங்களும் நிரம்பி வழிவதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


வெள்ளத்தினால் ஆயிரக்கணக்கான  நெற்பயிர்கள் வெள்ளத்தில் அள்ளுண்டுபோயுள்ளதுடன், பலத்த காற்று வீசிவருகின்றது. இதனால் மரங்களும் முறிந்து விழுந்துள்ளதுடன், தோட்டங்களும் பாதிக்கப்பட்டுளன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »