Our Feeds


Tuesday, November 12, 2024

Zameera

பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை 14ஆம் திகதி மாலை ஆரம்பம்


 பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் 14ஆம் திகதி மாலை 4.15 மணிக்கு ஆரம்பமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12) நடைபெற்ற பொதுத் தேர்தல் தொடர்பில் அறிவிக்கும் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், தேர்தல் தொகுதி முடிவுகள் மற்றும் மாவட்ட முடிவுகள் தேர்தல் செயலகத்தால் மறுபரிசீலனை செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டவுடன் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என்றும், எனவே உத்தியோகபூர்வமற்ற தேர்தல் முடிவுகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த தலைவர்,

“… தபால் வாக்குகளை எண்ணும் பணி 4.15 மணிக்கு தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், அந்தந்த வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் 14ஆம் திகதி மாலை சுமார் 7.15 மணியளவில் வழக்கமான வாக்கு எண்ணிக்கையை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் முடிவுகளை ஊடகங்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதுவரை அதிகாரபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்”

அதேபோல், வாக்கு எண்ணிக்கை குறித்தும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கருத்து தெரிவித்தார்.

வாக்கு எண்ணிக்கை 3 கட்டங்களாக நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்கள் அதிக வாக்குகளின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தெரிவு செய்யப்படுவர்.

“மூன்று கட்டமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முதலில் ஒவ்வொரு பெட்டியிலும் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.
இரண்டாவது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் ஒவ்வொன்றும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும். இறுதியில், ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட கட்சி மற்றும் சுயேச்சைக் குழுவில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.க்களின் எண்ணிக்கை வாக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கணக்கிடப்படும். அதன்பிறகு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும். அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்கள் அவர்கள் பெற்ற அதிக வாக்குகளின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.” என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »