திறமைக்குக் கிடைத்த இடம்
சகோதரர் முக்பில் சினான் அவர்களின் பெயர், இன்று எல்லா சமூக வலைத்தளங்களிலும், பரவலாகப் பகிரப்பட்டு வருகின்ற ஒரு பெயராக மாறிவிட்டது. இன்னும், பலரும் அவரை பலவிதங்களிலும் கௌரவப்படுத்த முன் வந்துள்ளனர், விழாக்கள் அன்பளிப்புக்கள் சந்திப்புகள் எனப் பலதும் குவிந்த வண்ணம் உள்ளன. வெளிநாட்டு தூதரகங்களே அவரை அழைத்து கௌரவிக்கின்றது என்றால் அவரது விசேடம் என்னவாக இருந்திருக்கும்!!!
காத்தான்குடியைச் சேர்ந்த, 12 வயதையுடைய சிறுவனே சகோதரர் முக்பில் ஸினான் அவர்கள், அவர் பிறப்பிலேயே கண் பார்வையை இழந்தவர், கேட்கும் சக்தியை பயன்படுத்தி அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து பூரண படுத்தியுள்ளார். அதன் மூலம் (முயற்சி இன்மையே உண்மையான ஊனம்) என்பதை உலகுக்கு இன்னொரு முறை உறுதிப்படுத்தியுள்ளார். மஸ்ஜிதுல் ஹராமின் இமாமாகிய ஷேக் ஸுதைஸ் அவர்களை சந்தித்து அவர் முன் ஓதி காண்பிக்க வேண்டும் என்பது அவரது ஆசையாக உள்ளது, இவ்வாசையை நிறைவேற்றிக் கொடுப்பதற்கு பலரும் முயற்சி செய்து கொண்டிருக்கும் இத்தருணத்தில்
சவுதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவர் உஸ்தாத் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்கள், 05/11/2024 இன்று அச்சிறுவனை சவுதித் தூதரகத்துக்கு அழைத்து கௌரவித்துள்ளார். இந்நிகழ்வானது அச்சிறுவனின் ஆசையை நிறைவேற்றுவதற்கான ஒரு அடித்தளமாகவும் இருக்கலாம் என நம்பப்படுகின்றது. இவ்விசேட ஆளுமையை கௌரவ படுத்திய சவுதி அரேபியத் தூதுவர் உஸ்தாத் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன், சிறுவன் முக்பில் ஸினான் அவர்கள் இன்னும் பல சாதனைகளை புரிய வேண்டும் எனவும் மனமார வாழ்த்திப் பிராத்திக்கின்றேன்.
கலாநிதி MHM Azhar (PhD)