Our Feeds


Wednesday, November 20, 2024

Zameera

10ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை


 பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை (21) ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான ஒத்திகை இன்று (20) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

நாளை காலை 9.55 மணிக்கு வாக்கழைப்பு மணி ஒலிக்கப்பட்டு மு.ப 10.00 மணிக்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்படவிருப்பதுடன், செங்கோல் சபா மண்டபத்தில் வைக்கப்பட்டதும், பாராளுமன்றத்தைக் கூட்டும் ஜனாதிபதியின் பிரகடனத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் சபையில் வாசிப்பார்.

முதலாவதாக சபாநாயகரின் தெரிவு இடம்பெறவிருப்பதுடன், அரசியலமைப்பின் 64 (1) பிரிவு மற்றும் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 4,5 மற்றும் 6 இன் ஏற்பாடுகளுக்கு அமைய சபாநாயகர் வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்தல், சபாநாயகரின் பதவிச்சத்தியம் அல்லது உறுதியுரை, பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிச்சத்தியம் அல்லது உறுதியுரை, பிரதிச் சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் வாக்களிப்பினால் தெரிவுசெய்தல் என்பன இடம்பெறும்.

முதலாவது நாளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆசன ஒதுக்கீடு மேற்கொள்ளப்படாது என்பதால் தமக்கு விரும்பிய ஆசனங்களில் அமர முடியும் என்பது விசேடமானதாகும்.

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் ஆரம்ப நிகழ்வை எளிமையான முறையில் நடத்துமாறு ஜனாதிபதி வழங்கிய பணிப்புரைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு அமைய ஜயமங்கள கீதம், முப்படையினரின் அணிவகுப்பு, மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனப் பவனி என்பன இடம்பெறாது என படைக்கல சேவிதர் குஷான் ஜயரத்ன தெரிவித்தார்.

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் ஆரம்ப நாள் நிகழ்வில் வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர்கள், பிரதம நீதியரசர், உயர்நீதிமன்ற நீதிபதிகள், சட்டமா அதிபர், அமைச்சுக்களின் செயலாளர்கள், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட விசேட விருந்தினர்கள் கலந்துகொள்ளவிருப்பதாக படைக்கல சேவிதர் குஷான் பெர்னாந்து தெரிவித்தார்.

விருந்தினர்களுக்கான அழைப்பிதழ்கள் இலத்திரனியல் முறையில் (E-Invitations) அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »