2024 பொதுத் தேர்தலில் நடிகரும் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்க சமர்ப்பித்த தேர்தல் வேட்புமனுவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் (FR) மனுவை விசாரணையின்றி தள்ளுபடி செய்யுமாறு இலங்கை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதிவாதிகள் முன்வைத்த பூர்வாங்க ஆட்சேபனைகளை கருத்திற்கொண்ட பிரீத்தி பத்மன் சுரசேன, குமுதினி விக்கிரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு, மனுவை நிராகரித்து இன்று உத்தரவு பிறப்பித்தது.
கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சைக்குழு உறுப்பினர் ஒருவர் கடந்த வாரம் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இதில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சி சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவை நிராகரித்து உத்தரவிடுமாறு மனுதாரர் நீதிமன்றில் கோரியுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வாக்களிக்கவோ அல்லது பாராளுமன்றத்தில் அமர்வதற்கோ உரிமை இல்லை என்ற அடிப்படையில் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.