Our Feeds


Monday, October 21, 2024

SHAHNI RAMEES

#Update: சிலாபத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மூவர் – பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்கள்!

 

சிலாபத்தில் வீடொன்றில் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் பிரேத பரிசோதனைகள் இன்று (21) இடம்பெற்றன.



குறித்த பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



உயிரிழந்தவர்களில் 51 வயதுடைய நபரான சேனாரத்ன என்பவர் காணிகளை மோசடி செய்து விற்பனை செய்து வந்தவர் எனவும், 44 வயதுடைய அவருடைய மனைவி மஞ்சுளா நிரோஷனி பண்டார சிலாபம் பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் எனவும் மற்றும் 15 வயதுடைய அவர்களின் மகளான நெத்மி நிமேஷா சிலாபம் ஆனந்தா தேசிய பாடசாலையில் தரம் 10 இல் கல்வி பயின்று வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 



கண்டெடுக்கப்பட்ட சடலங்களில் இருவரின் சடலம் மீதான பிரேதப் பரிசோதனைகளில் தாய் மற்றும் மகள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில், அதிக இரத்தப் போக்கு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 



இந்நிலையில் தடயவியல் பரிசோதனை அறிக்கைகளின் அடிப்படையில் மனைவி மற்றும் மகளை உயிரிழந்த சேனாரத்ன என்பவரே கொலை செய்துவிட்டு தற்கொலை செய்திருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.



இது குறித்து மேலும் தெரியவருகையில்,



உயிரிழந்த மஞ்சுளா நிரோஷனியின் பிரேதப் பரிசோதனை முதலில் நடத்தப்பட்ட நிலையில், இவரது கழுத்தில் கூரிய ஆயுதத்தால் 6 முறை குத்திக்கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 



மேலும், அவர் 18ஆம் திகதி இரவு இறந்திருக்கலாம் என்றும் அதிக இரத்தப்போக்கு காரணமாக மரணம் நிகழ்ந்ததாகவும், மறுநாள் உடல் எரிக்கப்பட்டதாகவும் தடயவியல் மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார். 



மகள் நெத்மி நிமேஷாவின் கழுத்தில் 02 வெட்டுக்காயங்கள் காணப்பட்டதுடன், அவர் கடந்த 19ஆம் திகதி இரவு கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.



உயிரிழந்த சேனாரத்ன காணிகளை மோசடி செய்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில், பலரிடம் கடன் பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



இதன் காரணமாக கொக்காவில சிலாபம் குருநாகல் வீதியில் உள்ள தனது மனைவி மஞ்சுளா நிரோஷனிக்கு சொந்தமான 05 ஏக்கர் காணியை விற்பனை செய்யுமாறு மனைவியிடம் கேட்டுள்ளார். அவரது மனைவி இதற்கு சம்மதிக்கவில்லை.



சுமார் 02 மாதங்களுக்கு முன்னர் அவர்களது வீட்டில் இருந்த சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் காணாமல் போயுள்ளதுடன், வெளியாட்கள் எவரும் வீட்டிற்குள் நுழையவில்லை எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.



இவ்விரு சம்பவங்கள் காரணமாக கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி வாய்த்தர்க்கம் ஏற்பட்டு வந்துள்ளது. இதன் பின்னணியிலேயே இந்த கொலைகள் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 



இவர்கள் தமது அயல்வீட்டாருடன் எந்த உறவையும் பேணவில்லை என்பதால் வீட்டில் என்ன நடந்தது என்பது குறித்த பல விவரங்களை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »