ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
ஆட்சி நிர்வாகம், அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் முறைமை என்பன தொடர்பில் இதன் போது முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டது.
"பல் பரிமாண அபாய சூழ்நிலைகளைப் புரிந்துகொள்வது மற்றும் இலங்கை மக்கள் மீதான அவற்றின் தாக்கம்" என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதியினால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கையளிக்கப்பட்டது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டம் பூரண ஆதரவை வழங்கும் எனவும் பிரதிநிதி உறுதியளித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
ஆசிய பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் விவசாய உற்பத்தித் திறன் பலவீனமான மட்டத்தில் காணப்படுவதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேலும், இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்திற்கு ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்த உதவிச் செயலாளர் நாயகம், ஊழலைக் குறைப்பதற்கான முக்கியமான கருவியாக டிஜிட்டல் மயமாக்கலைப் பயன்படுத்த முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் முறைமையில் சீர்திருத்தங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அத்தகைய சீர்திருத்தங்கள் அனைத்து இன மற்றும் மத சமூகங்களையும் உள்ளடக்கிய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.
நுண்கடன் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன், அத்துறையின் வட்டி விகிதங்கள் நியாயமற்றவை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அதிக பெண்களை உள்வாங்குவதன் மூலம் நுண்நிதித் துறைக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய அபிவிருத்தி வங்கியொன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், பெண் தொழில்முயற்சியாளர்கள் முன்வைக்கும் சிறந்த முன்மொழிவுகளுக்கு திறைசேரி உத்தரவாதங்களை வழங்குவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோடா, மூலோபாய ஈடுபாடு, டிஜிட்டல் மற்றும் புத்தாக்கக் குழுவின் தலைவர் பாதில் பாக்கீர் மாக்கார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.