பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். இது தொடர்பான இராஜினாமா கடிதங்கள் நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம் அவர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க மற்றும் உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பி. உடவத்த நேற்றுடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக எழுத்து மூலம் தெரிவித்துள்ளனர்.
மேலும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களும் தமது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2020 இல் நியமிக்கப்பட்ட தற்போதைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.