Our Feeds


Saturday, October 19, 2024

SHAHNI RAMEES

NPP எதிர்க்கட்சியிலிருந்து கூறியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் - எஸ்.எம்.மரிக்கார்

 


ஜனாதிபதித் தேர்தலில் மக்கள்

தமது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர். எனவே தேசிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியிலிருந்தபோது பேசிக்கொண்டிருந்ததைப் போன்று, இனியும் இருக்க முடியாது. எதிர்க்கட்சியிலிருந்து கூறியவற்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். 


கொழும்பில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 


நாடு வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு சமநிலையான பாராளுமன்றம் இருக்க வேண்டும். தற்போது அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகியுள்ளார்.  


எனவே பிரதான எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றி பெறச் செய்வதற்கு முயற்சிக்கின்றோம்.  


எவ்வாறிருப்பினும் வெற்றியை உறுதிப்படுத்த முடியாதவர்களே எதிர்க்கட்சியாவதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர். 


கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அதியுயர் பலத்தை வழங்கியதன் காரணமாகவே அவர் இரசாயன உரத்துக்கு தடை விதித்தார். அது மாத்திரமின்றி பணம் அச்சிடப்பட்டது. 


சர்வதேச நாணய நிதியத்துக்குச் செல்வதை நிறுத்தி, பணவீக்கத்தை அதிகரித்து நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு தள்ளுவதற்கு இந்த தீர்மானங்களே ஏதுவாக அமைந்தன. எனவே, அரசியலை விட நாடு வீழ்ச்சியடைவதை தடுப்பதே முக்கியத்துவமுடையதாகும். 


பொருளாதார ரீதியிலும், கலாசார ரீதியிலும் நாடு முன்னேற்றமடைய வேண்டுமெனில் சமநிலையான பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.  


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் முறைமை மாற்றமடைய வேண்டும் எனக் கூறிக்கொண்டிருந்தார். ஆனால், தற்போது ராஜபக்ஷர்களுக்கு மீண்டும் வாக்களிக்குமாறு கூறுகின்றார். 


ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய முடிவிலிருந்து நாட்டுக்கு என்ன தேவை என்பது தெளிவாகத் தெரிகின்றதல்லவா? முன்னாள் ஜனாதிபதி ரணிலுடன் இருப்பவர்கள் அவர் மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும் என்று எண்ணுகின்றனர். ஆனால், அவருக்கு வாக்களித்த மக்களுக்கு அவர் தொடர்பில் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை. 


ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தமது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர். எனவே தேசிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியிலிருந்தபோது பேசிக்கொண்டிருந்ததைப் போன்று, இனியும் இருக்க முடியாது. 


அன்று தேர்தல் பிரசார மேடைகளில் பேசியவற்றை செயற்படுத்த வேண்டும். வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் அரச சொத்துக்களை மீளக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.  

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »