Our Feeds


Thursday, October 31, 2024

Zameera

பிரதமருக்கும் ILO பணிப்பாளருக்கும் இடையில் சந்திப்பு!


 சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) இலங்கைக்கான பணிப்பாளர் ஜொனி சிம்ப்சன் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (30) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. 

தொழிலாளர் தரநிலைகள், பெண்கள் வலுவூட்டல் மற்றும் சமூக உரையாடலை மேம்படுத்துதல் ஆகிய விடயங்கள் குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கைக்கும் சர்வதேச தொழிலாளர் அமைப்புக்கும் இடையிலான ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு அமைந்திருந்தது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிகள் மற்றும் பரஸ்பர உறவுகளைப் பேணுவதற்கு இலங்கை தொழில் அமைச்சு வழங்கிய ஆதரவுக்கு திருமதி சிம்சன் நன்றி தெரிவித்தார். பாதிக்கப்படக்கூடிய பிரிவினர்களை, குறிப்பாக பெண்களைப் பாதுகாப்பதற்கு தொழிலாளர் சட்டங்களை மீளாய்வு செய்ய வேண்டிய முக்கியமான தேவை மற்றும் பாலின சம்பள இடைவெளியைக் குறைப்பதன் மூலம் பெண்களுக்கு தரமான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டியதன் தேவை குறித்து இந்த கலந்துரையாடலின் போது வலியுறுத்தப்பட்டது.

இச்சந்திப்பில், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி அசித செனவிரத்ன, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி உள்ளிட்ட இலங்கை அரசின் பிரதிநிதிகள், பிரதமரின் மேலதிக செயலாளர் மகிந்த குணரத்ன, தொழில் அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பி. வசந்தன் மற்றும் ஐக்கிய நாடுகள் மற்றும் மனித உரிமைகள் பணிப்பாளர் திலினி குணசேகர ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »