கிழக்கு மாகாண பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட 2024ம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்களில் பல முறைகேடுகள் இருப்பதாகக் கூறி பாதிக்கப்பட்ட 14 ஆசிரியர்களினாலும் இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் ஆசிரியர் சங்கத் தலைவர் ப்ரியந்த பெர்னாண்டோ ஆகியோரினாலும் கல்முனை மாகாண மேல் நீதிமன்றத்தில் கட்டாணை (writ) மனு கடந்த மே மாதம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
ஆசிரியர் இடமாற்ற சபை மற்றும் ஆசிரியர் இடமாற்ற மேன்முறையீட்டு சபை ஆகியன சரியாகக் கட்டமைக்கப்படவில்லை என்றும் கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றக் கொள்கைக்கு முரணாக ஆசிரியர் இடமாற்றங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் கூறி தங்களது இடமாற்றங்களை ரத்து செய்யக் கோரியும் தங்களது மனுவில் பிரார்த்தித்திருந்தனர்.
இன்று (2024.10.03) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதிகள் சார்பில் தோன்றிய கிழக்கு மாகாண சபை சட்டத்தரணிகள் பாதிக்கப்பட்ட அனைத்து மனுதாரர்களினதும் இடமாற்றங்களினை இரத்து செய்வதாகவும் அவர்கள் இடமாற்றத்திற்கு முன்னர் எந்தப் பாடசாலைகளில் கற்பித்தார்களோ அந்தப் பாடசாலைகளில் அவர்களை மீள அமர்த்துவதற்கும் எதிர்வரும் காலங்களில் ஆசிரியர் இடமாற்றக் கொள்கையை கண்டிப்பாக பின்பற்றி இடமாற்றங்கள் செய்வதாகவும் உறுதி அளித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து இவ்வழக்கைத் தாக்கல் செய்த பாதிக்கப்பட்ட 14 ஆசிரியர்களினதும் இடமாற்றம் இரத்து செய்யப்பட்டிருக்கிறது.
அவர்களுக்குரிய உத்தியோகபூர்வக் கடிதங்களை எதிர்வரும் நாட்களில் எதிர்பார்க்கலாம்.
இந்த வழக்கிற்கு சட்டத்தரணிகளான றாஸி முஹம்மட் ஜாபிர் மற்றும் எப். எச். ஏ. அம்ஜாட் ஆகியோர் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பில் தோன்றி காத்திரமான வாதங்களை முன்வைத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.