Our Feeds


Thursday, October 24, 2024

Zameera

ஜொன்ஸ்டனின் BMW கார் தொடர்பில் வௌியான தகவல்கள்


 முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் பதிவு செய்யப்படாத BMW ரக கார் இங்கிலாந்தில் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சர்வதேச பொலிஸ் தரவுகளின் மூலம் சம்பந்தப்பட்ட BMW காரின் Chassis எண்ணை சோதனை செய்தபோது, ​​இது 2021ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து திருடப்பட்ட கார் என்பது தெரியவந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் அசெம்பிள் செய்யப்பட்ட பதிவு செய்யப்படாத BMW ரக காரை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (23) உத்தரவிட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சந்தேக நபரை நேற்று பிற்பகல் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னரே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ சுமார் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அங்கு, குறித்த BMW கார் தொடர்பான வழக்கின் பிரதான சந்தேக நபராக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பாரிய கொள்ளைப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த BMW வாகனமானது திருடப்பட்ட இலக்கத் தகடு மூலம் பயன்படுத்தப்பட்டதாகவும், இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தரவு அமைப்பைச் சோதித்ததில் அது சட்டப்பூர்வமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

சர்வதேச பொலிஸ் தரவுகளின் மூலம் சம்பந்தப்பட்ட BMW காரின் Chassis எண்ணை சோதனை செய்தபோது, ​​இது 2021ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து திருடப்பட்ட கார் என்பது தெரியவந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலதிகத் தகவல்களை வழங்கிய அதிகாரிகள், சட்டவிரோதமாக காரை இலங்கைக்குக் கொண்டு வந்த பின்னர், இரு வேறாக காணப்பட்ட பாகங்கள் ஒன்றிணைக்கப்பட்டன.

அப்போது சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், குறித்த கார் இங்கிலாந்தில் இருந்து திருடப்பட்ட போதிலும், தனது கட்சிக்காரருக்கு இதில் தொடர்பு இருப்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை. எனவே, பணமோசடி சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றச்சாட்டுகளை தொடர முடியாது எனவும் தெரிவித்தார்.

எனவே, எந்தவொரு நிபந்தனையின் கீழும் தமது கட்சிக்காரரை பிணையில் விடுவிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் கோரிக்கை விடுத்தார்.

இரு தரப்பு உண்மைகளையும் பரிசீலித்த நீதிபதி, சந்தேகத்திற்குரிய முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை ஒக்டோபர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

கொழும்பில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றின் தரிப்பிடத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த BMW காரொன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பாரிய கொள்ளைப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி சோதனையிடப்பட்டது.

பொலிஸாரின் விசாரணையில் அது முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்க உரித்தானது என்பது தெரியவந்துள்ளது.

அதன்படி, ஒக்டோபர் 10ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றில் உண்மைகளை அறிக்கை செய்த நீதவான் தனுஜா லக்மாலி, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதித்தார்.

இதேவேளை, தம்மை கைது செய்வதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி முன்னாள் அமைச்சர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​இந்த விசாரணை தொடர்பான வாக்குமூலத்தை மனுதாரர் வழங்குவது இன்றியமையாதது என மனுதாரரின் சட்டத்தரணியிடம் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

மனுதாரரின் சட்டத்தரணி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்று (23) காலை 9 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வந்து உரிய வாக்குமூலத்தை அளித்து பின்னர் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அலுவல்கள் அமைச்சராக இருந்த போது, ​​சதொச நிறுவனத்தின் 153 உத்தியோகத்தர்களை வழமையான கடமைகளில் இருந்து நீக்கி வேறு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டமை தொடர்பான வழக்கு நேற்று (23) காலை கொழும்பு மேல் நீதிமன்றில் அழைக்கப்பட்டது.

இந்த வழக்கில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரட்ன பிடியாணை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »