இலங்கைக்கு வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆகியோரின் வாழ்த்துச் செய்திகளை கையளித்திருந்தார். இதன்போது டெல்லி விஜயத்துக்கான பிரதமர் மோடியின் அழைப்பையும் வழங்கினார். இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார விரைவில் இந்திய விஜயத்துக்கான அறிவிப்பை விடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதன் பிரகாரம் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் டெல்லிக்கு விஜயம் செய்வது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவதானம் செலுத்தியுள்ளார். எனினும், இறுதி திகதி உறுதிப்படுத்தப்படவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் இந்திய விஜயம் குறித்து அறிவிக்கப்படவுள்ள நிலையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரத்துறையின் விசேட குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடம்பெற்றிருந்த அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயம் மிகவும் இரகசியமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. இரு தரப்புகளுமே விஜயம் குறித்து எவ்விதமான தகவல்களையும் இன்றளவில் வெளிப்படுத்தவில்லை.
இந்த விஜயத்துக்கான ஏற்பாடுகளை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரத் துறையின் துணை அமைச்சரும் அந்தக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினருமான சன் ஹையான் முன்னெடுத்திருந்தார்.
மேலும், பெய்ஜிங்கில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளின்போது இலங்கையில் தாம் ஆட்சியைக் கைப்பற்றினால் நெருக்கடியின்றி நாட்டை நிர்வகிப்பதற்கு சீனாவிடமிருந்து என்ன வகையான உதவிகளை வழங்க முடியும் என சீன அதிகாரிகளிடம் அநுரகுமார திசாநாயக்க கேட்டிருந்தார்.
இந்த கலந்துரையாடலின் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்த துணை அமைச்சர் சன் ஹையான் பெலவத்தையில் உள்ள ஜே.வி.பி அலுவலகத்துக்கு சென்று, அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது, சீனாவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய விசேட முன்மொழிவுகளையும் உறுதிமொழிகளையும் கையளித்திருந்தார். உள்நாட்டு பொருளாதார ஊக்குவிப்பின் முதல் கட்டமாக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு உலகில் வேறு எந்த நாடும் செய்ய முடியாத வகையில் சீனா இலங்கைக்கு உதவ முடியும் என்று உறுதியளிக்கப்பட்டது.
இரு வருடங்களுக்குள் சீனாவில் இருந்து ஒரு மில்லியன் சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அனுப்ப முடியும் என துணை அமைச்சர் சன் ஹையான் அந்த சந்திப்பின்போது தெரிவித்தார்.
இதை ஒரே நேரத்தில் செய்ய முடியும் என்றாலும், இலங்கையில் தற்போதுள்ள உட்கட்டமைப்பு போதுமானதாக இல்லாததால், சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை படிப்படியாக ஒரு கோடி வரை அதிகரிக்க முடியும். எனவே தேர்தலில் வெற்றி பெற்றால் உங்களது வேண்டுகோளுக்கிணங்க சீரான பொருளாதார முன்னேற்றம் மற்றும் மறுசீரமைப்புகளுக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வசீனா வழங்கும் என்ற உறுதிப்பாட்டை சீன துணை அமைச்சர் வழங்கியிருந்தார்.
தேர்தல் வெற்றியின் பின்னர் சீன தூதுவரை சந்தித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஏற்கனவே திட்டமிடப்பட்ட விடயங்கள் மற்றும் புதிய பொருளாதார திட்டங்கள் குறித்து கலந்துரையாடியிருந்தார். இதற்கு அமைவாக எதிர்வரும் டிசம்பர் மாதம் தொடங்கும் சுற்றுலாப் பருவத்தில் 30 இலட்சம் சீன சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட குழுவை இலங்கைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர். அடுத்த சுற்றுலா பருவத்தில் அந்த தொகையை 60 இலட்சமாக உயர்த்த சீனா ஒப்புக்கொண்டுள்ளது.
மேலும் அடுத்தகட்ட ஒத்துழைப்புகளுக்காக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரத் துறையின் உயர்மட்ட குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி அநுரவின் சீன நட்பு குறித்து மேற்குலகம் உள்ளிட்ட பிற நாடுகள் கவனம் செலுத்தியுள்ளன. எவ்வாறாயினும், சீனா, இந்தியா, மேற்கு நாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகிய நாடுகளை சமநிலைப்படுத்தும் மிகவும் கவனமான பயணத்துக்கான ஆரம்ப நடவடிக்கைகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எடுத்துள்ளமை வெளிப்படுகின்றது. அதேபோல் இந்தியாவின் அழைப்பை ஏற்று ஏனைய ஜனாதிபதிகள் போல் அநுரகுமார திசாநாயக்க மிக விரைவில் டெல்லி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Sunday, October 6, 2024
டெல்லி செல்ல ஜனாதிபதி அநுர அவதானம் - சீன உயர்மட்ட குழு விரைவில் கொழும்பு வரும்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »