மதுபானசாலை அனுமதிப்பத்திரம் வழங்குவது சட்டவிரோத
வியாபாரமல்ல எனவும் சட்ட விதிமுறைகளை மீறி மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கியோரின் பெயர் விபரங்களை வெளியிடுவதாக தெரிவித்திருந்தும் இதுவரை வெளியிடாதமைக்கு என்ன காரணமெனவும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரியவிடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது குறித்து அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் இட்ட பதிவிலேயே அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
சமீப காலங்களில் சட்ட விதிமுறைகளை மீறி அதிக எண்ணிக்கையில் கலால் திணைக்களத்தால் மதுபான உரிமங்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
"இது சட்டவிரோத ஊழல் நடைமுறை' மற்றும் 'அரசியல் லஞ்சம்' என்று சரியாக அழைக்கப்படுகிறது," என்று அவர் தெரிவித்தார்.
"கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் சட்டவிரோத மதுபானசாலை உரிமம் ஒரு பரபரப்பான விடயமாக இருந்தது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்கள் சமீபத்தில் வழங்கப்பட்ட அனைத்து 'உரிமங்களையும்' இடைநிறுத்துவதாகவும் உரிமம் வைத்திருப்பவர்களின் பெயர் பட்டியலை வெளியிடுவதாகவும் உறுதியளித்தனர்.
அவர்கள் குறிப்பிட்ட பெயர் பட்டியலை வெளியிடுவதிலிருந்தும், இந்த சட்டவிரோத மதுபானசாலை உரிமங்களை இரத்து செய்வதிலிருந்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பின்வாங்குவது ஏன்? என மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.