Our Feeds


Saturday, October 12, 2024

Zameera

ஜனாதிபதித் தேர்தல் வெற்றியை ஏனைய தேர்தல்களிலும் பெற முடியுமென எண்ணுவது தவறு - எரான் விக்கிரமரத்ன


 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் அடுத்துவரும் ஒவ்வொரு தேர்தல்களிலும் வெற்றி பெற்று விட முடியும் என்று எண்ணுவது தவறான நிலைப்பாடாகும். கட்சிக்கு வாக்களிக்குமாறு கூறி விட்டு, தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் யாரை பாராளுமன்றத்தை அனுப்புவது என்பதை தலைமை பீடம் தெரிவு செய்வதற்கு இது சீனா அல்ல என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் பொதுத் தேர்தல் , மாகாணசபைத் தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என்ற நிலைப்பாடு பெரும்பாலானோர் மத்தியில் காணப்படுகிறது. இது முற்றிலும் தவறான நிலைப்பாடாகும். பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களைக் கைப்பற்றும் கட்சியே ஆட்சியமைக்கும். வரவு - செலவு திட்டத்தை நிறைவேற்றுவதற்கும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை காணப்பட வேண்டும்.

அவ்வாறான அரசாங்கத்தை ஐக்கிய மக்கள் கூட்டணியால் உருவாக்க முடியும் என்று நம்புகின்றோம். ஜனநாயக நாடுகளில் ஜனாதிபதி ஒரு கட்சியிலிருந்தும், பிரதமர் பிரிதொரு கட்சியிலிருந்தும் தெரிவு செய்யப்படுவது புதிய விடயமல்ல. அமெரிக்காவில் அடிக்கடி இவ்வாறு இடம்பெற்றுள்ளது. சில கட்சிகள் கட்சிக்கு வாக்களிக்குமாறு கூறுகின்றன. விருப்பத்தெரிவு குறித்து பேசுவதில்லை.

நாம் பிரதிநிதித்துவ அரசியலையே முன்னெடுக்கின்றோம். அது சர்வாதிகாரமல்ல. இது சீனா அல்ல. சீனாவைப் போன்று யாரை அங்கு நியமிப்பது என்று தீர்மானிக்க முடியாது. தமக்காக களமிறங்கும் வேட்பாளர்கள் யார் என்பதை அறிந்து மக்கள் தீர்மானிக்க வேண்டும். கட்சிக்கு வாக்களித்தால், ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஒருவரை நீக்கிவிட்டு பிரிதொருவரை நியமிக்கக் கூடிய வாய்ப்புக்கள் கூட காணப்படுகின்றன.

எனவே எந்த கட்சியிலிருந்து எந்த பிரதிநிதியைத் தெரிவு செய்வது என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். சரியானவற்றைக் கூறும், அவற்றை செய்து காண்பிப்பவர்களையே மக்கள் தெரிவு செய்ய வேண்டும். அரசாங்கத்தின் சரியான தீர்மானங்களுக்கு நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »