பரீட்சை மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 473 பேருக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் திருப்தியடைய முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் சில வினாக்கள் கசிந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பகுதி வினாத்தாளின் சில கேள்விகள் கசிந்ததாக குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டதை அடுத்து பரீட்சைகள் திணைக்களமும் குற்றப்புலனாய்வு திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தன.
விசாரணைகளின் அடிப்படையில் மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் மற்றும் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஆகியோர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, 2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்தாதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் நேற்று அறிவித்தது.