Our Feeds


Sunday, October 27, 2024

SHAHNI RAMEES

இஸ்ரேலியர்களின் சட்டவிராேத நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - புபுது ஜாகொட


சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்திருக்கும்

இஸ்ரேலியர்கள் அவர்களின் மத வழிபாட்டு தலங்களை நிர்மாணித்து வருவதுடன் சுற்றுலா பயணிகளை இலக்குவைத்து வியாபார நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அனுமதிக்க முடியாது.  


அதேபோன்று முஸ்லிம் மக்களை கோபமூட்டும் வகையில் மதில்களில் சித்திரம் வரையும் நடவடிக்கையும் இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் போராட்ட அமைப்பின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் புபுது ஜாகொட தெரிவித்தார்.  


இலங்கையில் இருக்கும் இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளுக்கு தாக்குதல் இடம்பெறும் அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்க தூதரகத்தினால் விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கை தொடர்பில் தொலைக்காட்சி நிகழ்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.  


இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிகையில்,  


சுற்றுலா விசாவில் நாட்டுக்கு வந்திருக்கும் இஸ்ரேலியர்கள் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் முஸ்லிம் மக்களை கோபமூட்டும் வகையில் காஸாவில் இடம்பெற்றுவரும் இன அழிப்பு தொடர்பான சித்திரங்களை மதில்களில் வரைந்நிருக்கின்றனர்.   


அதேபோன்று யுத்தத்தில் கொள்ளப்பட்ட இஸ்ரேல் இராணுவ வீரர் ஒருவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரின் படம் பொறிக்கப்பட்ட சுவராெட்டிகளும் திருகோணமலை மாவட்டத்தில் சில இடங்களில் ஒட்டப்பட்டிருக்கின்றன.


குறிப்பாக முஸ்லிம்களின் பள்ளிவாசல் அமைந்திருக்கும் இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் வரையான தூரத்தில் ஒட்டப்பட்டிருக்கின்றன. இந்த விடயங்களை யார் செய்கிறார்கள் என்பதை அரசாங்கம் தேடிப்பார்க்க வேண்டும்.  


காஸாவில் இடம்பெறும் இஸ்ரேல் இராணுவத்தின் இன அழிப்புக்கு எதிராக இலங்கையில் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் பலஸ்தீனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்து வந்திருக்கின்றன.


சுற்றுலா விசாவில் வருபவர்கள் எவ்வாறு மதில்களில் சித்திரம் வரையவும் சுவரொட்டிகளை ஒட்டவும் முடியும்?. எமக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் அந்த பிரதேசத்தில் தங்கி இருக்கும் இஸ்ரேல் இனவாத பிரிவினரே இதனை செய்துள்ளனர்.


அத்துடன் இஸ்ரேலியர்கள் நாட்டுக்குள் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு கட்டிடங்கள் இருக்கின்றன. பொலிஸ் பேச்சாளரும் இதனை தெரிவித்திருந்தார். சுற்றுலா விசாவில் வந்து எவ்வாறு வியாபாரம் செய்ய முடியும்.


வியாபாரம் செய்வதாக இருந்தால் அதற்கு அரசாங்கத்தின் பூரண அனுமதி பெற்றுக்கொண்டிருக்க வேண்டும். அதேபோன்று மத வழிபாட்டு தலங்களும் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றனர். தெஹிவளை அல்விஸ் பிரதேசத்தில் யூத மத வழிபாட்டு இடமொன்று நிர்மாணிக்கப்படுகிறது. எவ்வாறு இதற்கு இடமளிக்க முடியும்?


யூத வழிபாட்டு நிலையம் தெஹிவலை, வெளிகமை, அறுகம்பே போன்ற இடங்களிலும் நிர்மாணிக்கப்படுகின்றன. அந்த வழிபாட்டு நிலையங்களுக்கு விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருக்கின்றன.


இதனால் முஸ்லிம் பகுதிகளில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலியர்களை இலக்குவைத்து தாக்குதல் இடம்பெறப்போவதாக தெரிவிக்கப்படும் தகவல் தொடர்பிலும் சந்தேகம் எழுகிறது. நாடுக்குள் இஸ்ரேலியர்களின் இந்த நடவடிக்கை சில காலமாக இருந்து வருகிறது.


அதேபோன்று அண்மையில் சுற்றுலா பயணிகள் என இஸ்ரேலியர்கள் 20ஆயிரம் பேர்வரை இலங்கைக்கு வந்தனர். அவர்களில் இஸ்ரேல் இராணுவத்தைச் சேர்ந்தவர்களும் வந்திருந்தனர். ஏனெனில் காஸாவில் இஸ்ரேல் இராணுவம் யுத்தம் நடத்துவதில்லை.


அங்கு இன அழிப்பே அவர்கள் மேற்கொள்கிறார்கள். யுத்தம் இடம்பெறுமாக இருந்தால் இராணுவத்திருக்கிடையிலேயே மோதல் இடம்பெறவேண்டும். 


ஆனால் காஸாவில் 10 நிமிடங்களுக்கு ஒரு சிறுவன் கொலை செய்யப்படுகிறான். இவ்வாறு இனப்படுகொலை செய்யும் இஸ்ரேல் இராணுவத்தினர் மன அழுத்தங்களுக்கு ஆளாகக்கூடாது என்பதற்கே குறிப்பிட்ட காலத்துக்கு பினனர் அவர்களை இவ்வாறு சுற்றுலா அனுப்பி, அவர்களின் மன அழுத்தத்தை இல்லாமலாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


எனவே இன அழிப்பை மேற்கொண்டுவரும் இஸ்ரேல் இராணுவ வீரர்கள் மன அழுத்தத்தில் இருந்து மீள இலங்கையின் வளங்களை பயன்படுத்துகிறதா என்பது தொடர்பாகவும் இஸ்ரேலியர்களால் நாட்டுக்குள் நிர்மாணிக்கப்படும் சட்டவிராேத கட்டிடங்கள் மற்றும் அவர்களின் மத வழிபாட்டு தலங்களுக்கு விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பது தொடர்பிலும் தற்போதுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இதற்கு முன்னர் இருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெளிவுபடுத்த வேண்டும்.


பொலிஸ்மா அதிபரும் விளக்கமளிக்க வேண்டும். இஸ்ரேலியர்களின் இந்த நடவடிக்கையால் எமது சுற்றுலா துறை பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதுடன் நாட்டுக்குள் மதங்களுக்கிடையில் முரண்பாடும் ஏற்படும் அபாயம் இருக்கிறது. அதனால் அரசாங்கம் இது தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »