29 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட 08 அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழு ஒன்றும் போட்டியிடும் எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று (26) காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது.
இந்த தேர்தலில் 48 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறவுள்ள நிலையில் இதில் வாக்களிக்க 55,643 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஆர். எம். ஏ.எல்.ரத்நாயக்க குறிப்பிட்டார்.
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் கண்காணிப்பு பணிகளுக்காக தனது அதிகாரிகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளதுடன், தபால் மூல வாக்களிப்பு ஒக்டோபர் 30 மற்றும் நவம்பர் 4 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.