கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நவம்பர் மாதம் 25 ஆம் திகதியிலிருந்து டிசம்பர் 20 ஆம் திகதி வரை இடம்பெறுமென்றும் எந்தவொரு காரணத்துக்காகவும் பரீட்சை ஒத்திவைக்கப்பட மாட்டாதென்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (30) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 25 ஆம் திகதியிலிருந்து டிசம்பர் 20 ஆம் திகதி வரை இடம்பெறும் என்ற உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அறிவிப்பு மார்ச் மாதத்திலேயே வெளியிடப்பட்டுவிட்டது.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் பரீட்சை இடம்பெறும் தினங்கள் தொடர்பில் தவறான செய்திகள் வெளியிடப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அதற்கமைய, இதனூடாக மாணவர்களும் ஒருசில தவறான நிலைப்பாடுகளில் இருப்பதாகவும், பரீட்சை தொடர்பில் நம்பிக்கையின்றி சிலர் இருப்பதாகவும் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
எனவே, பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ தகவல்களை தவிர வேறு எந்த தகவல்களையும் நம்பவேண்டாம். அதனூடாக பரீட்சை தயார் நிலைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம்.
ஆகவே, எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகும் உயர் தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை இடம்பெறும். பரீட்சை திகதிகளில் எந்த மாற்றமும் இல்லை. பரீட்சைக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பரீட்சை நேர அட்டவணைகளை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
விரைவாக பரீட்சை அட்டைகளை விநியோகிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்திருக்கிறோம். உயர் தரத்துக்கான சகல கற்றல் நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ள நிலையில் பரீட்சை திகதியை ஒத்திவைப்பதற்கு எந்த அவசியமும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நா.தினுஷா