Our Feeds


Tuesday, October 29, 2024

Zameera

விரைவில் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்க திட்டம்


 நாட்டை கட்டியெழுப்பி பொருளாதாரத்தை அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் தனக்கும், தற்போதைய அரசாங்கத்துக்கும் எந்தவொரு தரப்பினருடனும் விசேடமான தொடர்ப்புகள் இல்லை என்பதால் அதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எவ்வித தயக்கமும் இன்றி எடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார்.

இலங்கை வங்கிச் சங்கத்தின் பிரதிநிதிகளை இன்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் வங்கிகளின் வகிபாகம் மற்றும் அவர்களின் பிரச்சினைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலின் முக்கியத்துவம் மற்றும் டிஜிட்டல் அடையாள அட்டைகளை பெற்றுக்கொடுத்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன், ஒன்றரை வருடங்களில் அந்த பணிகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியுடன் வங்கிக் கட்டமைப்பு நிலைமையை தாங்கிக்கொண்டு தொழில் முனைவோரையும் பாதுகாப்பது தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, தொழில் முனைவோர் அந்த தாங்கிக்கொள்ளலை தவறாகப் பயன்படுத்துவது சிக்கலான விடயம் என்றும் சுட்டிக்காட்டினார்.

அதேபோல் வங்கிகளும் தொழில் முனைவோரை பாதுகாக்கும் வகையில் முழுமையான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அதேபோல் தற்போது முறையற்று கிடக்கும் இலங்கை பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்தும் போது, முறையற்ற பொருளாதாரத்திற்குள் தங்கியிருக்கும் பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் ஒழுங்குபடுத்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

இலங்கையில் தற்போது காணப்படும் நெருக்கடி, வேலைத்திட்டங்களுக்கான செலவிடப்படும் காலப்பகுதி, மோசடி உள்ளிட்ட காரணங்களால் முதலீடுகளை நடத்திச் செல்வதில் காணப்படும் தடைகள் குறித்தும் தீர்க்கமாக ஆராயப்பட்டது.

இந்த வேலைத்திட்டத்தின் அனைத்துச் செயற்பாடுகளும் இலகுவான மற்றும் மோசடியற்ற, செயற்திறன் மிகுந்த பொறிமுறைக்குள் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »