Our Feeds


Wednesday, October 30, 2024

SHAHNI RAMEES

பொதுத்தேர்தல் திகதி மாற்றம்?


 பொதுத் தேர்தல் வரும் நவம்பர் 14ஆம் திகதி

நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் அது இரண்டு தினங்கள் பிற்போடப்பட்டு நவம்பர் 16ஆம் திகதி நடைபெறக்கூடும் என்று சட்ட வட்டாரங்கள் கூறுகின்றன. 


அரசமைப்பில் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினத்துக்கும் வாக்களிப்பு நடைபெற வேண்டிய தினத்துக்கும் இடையில் உள்ள காலம்பற்றித் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் காலக் கணக்குக்கு ஒரு நாள் முன்னதாக இப்போது பொது தேர்தல் திகதியிடப்பட்டிருப்பதாக சட்டத்துறை வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.


இந்த விடயத்தை முன்னிறுத்தி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு வரும் 4ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட இருக்கின்றது.


அரசு தரப்பு அந்தத் தவறை மன்றில் ஏற்றுக்கொண்டு, இரண்டு நாட்கள் தேர்தலைப் பின் தள்ளுவதற்கு இணங்க வாய்ப்புகள் இருக்கின்றன என இப்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.


14ஆம் திகதி வியாழக்கிழமை வாக்களிப்பை தீர்மானிப்பதற்கு பதிலாக வழமை போன்று சனிக்கிழமையன்று 16ஆம் திகதிக்கு அதனை நடத்த ஒழுங்குபடுத்தி இருந்தால் அது அரசமைப்பு குறிப்பிட்ட கால அவகாசத்தை வழங்குவதாக இருந்திருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.


நவம்பர் 15ஆம் திகதி பெளர்ணமி தினம். விடுமுறை நாள். ஆகையால் அடுத்த நாள் 16ஆம் திகதி தேர்தலை நடத்த இணக்கம் வரலாம் என்று நம்பப்படுகின்றது. அப்படி இணங்கினால் இரண்டு நாள் தேர்தல் பிற்போடப்படுகின்ற நிலைமை ஏற்படும்.


பின்னணி


எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் அரசியலமைப்புக்கு எதிரானதென உத்தரவிடுமாறு கோரி சிவில் செயற்பாட்டாளரும் நாம் ஸ்ரீலங்கா தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளருமான எச்.எம்.பிரியந்த ஹேரத் கடந்த வாரம் உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்தார்.


இந்த மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதியின் சார்பில் சட்ட மா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட அதன் அங்கத்தவர்கள் உட்பட்டோர் பெயரிடப்பட்டனர்.


பாராளுமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு சட்டத்தின் 10 ஆவது விதந்துரைக்கமைய வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்காக ஒக்டோபர் 04 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11 ஆம் திகதிவரையான காலப்பகுதி அறிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின்படி வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்முதல் ஐந்து வாரங்களுக்கு குறையாத, ஏழு வாரங்களுக்கு மேற்படாத காலப்பகுதிக்குள் தேர்தலுக்கான திகதி குறிப்பிடப்பட வேண்டுமென கேட்டிருந்தார்.


அதன்படி, வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட இறுதி தினமான ஒக்டோபர் 11ஆம் திகதி முதல் ஐந்து வார காலம் நவம்பர் 15ஆம் திகதியுடன் முடிவடைகிறது. அதேபோல் ஒக்டோபர் 11 முதல் ஏழு வார காலம் நவம்பர் 29ஆம் திகதியுடன் முடிவடைகிறது.


ஆனால், இப்போது அறிவிக்கப்பட்டுள்ள நவம்பர் 14ஆம் திகதி அந்த சட்ட எல்லைக்குள் இல்லையென மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டினார்.


இது தொடர்பில் தேர்தல் ஆணையாளரை அறிவுறுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பலனற்று போனதால், மக்களின் இறைமையும் நாட்டின் அரசியலமைப்பும் கவனத்திற்கொள்ளப்படவில்லையென தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டமைக்கு எதிரான உரிய உத்தரவை பிறப்பிக்குமாறு நீதிமன்றில் மேலும் கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 4ஆம் திகதி இடம்பெறவுள்ளது


அதன் அடிப்படையிலேயே தேர்தல் திகதியை மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »