பிணை நிபந்தனைகளை மீற மாட்டேன் என வைத்தியர் அருச்சுனா உறுதி அளித்ததை அடுத்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி வைத்தியசாலை முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அருச்சுனா , தொலைபேசியில் சக வைத்தியர்களை அச்சுறுத்தியமை , சமூக ஊடகங்களில் அவதூறு ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றங்களுக்கு எதிராக சாவகச்சேரி வைத்தியசாலையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
குறித்த வழக்கில் வைத்தியர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வழக்கு விசாரணையின் போது, பிணை நிபந்தனைகளை மீறியமை , ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறியமை உள்ளிட்ட காரணங்களால் பிணை இரத்து செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அந்நிலையில் கடந்த வாரம் அருச்சுனாவின் சட்டத்தரணி நகர்த்தல் பத்திரம் மூலம் மன்றில் பிணை விண்ணப்பம் செய்திருந்த நிலையில் அதற்கான கட்டளை வியாழக்கிழமை (10) வழங்கப்படும் என மன்று திகதியிட்டிருந்தது.
அந்நிலையில் புதன்கிழமை (09) மீண்டும் நகர்த்தல் பத்திரம் மூலம் மன்றில் பிணை விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில், வைத்தியர் இனி வரும் காலங்களில் பிணை நிபந்தனைகளை மீற மாட்டார் என உறுதி அளிக்கப்பட்ட நிலையில் இரண்டு ஆள் பிணையில் செல்ல மன்று அனுமதி அளித்தது.
அதேவேளை வைத்தியருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் வியாழக்கிழமை மன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.