“ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு நாங்களே வழிகாட்ட வேண்டும். அவருக்கு வழிகாட்டி சரியான பாதையில் ஆட்சியை கொண்டுச்செல்ல, தனது தலைமையிலான குழுவினர் கட்டாயம் பாராளுமன்றத்துக்கு சென்றே ஆகவேண்டும்” என்று சர்வசன அதிகார கூட்டணியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
திவுலப்பிட்டிய, படேபொல பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
எதிர்க் கட்சியை கைப்பற்றுவதற்காகவே இம்முறை தேர்தலில் போட்டியிடுகிறோம். எந்தவொரு உலக நாடுகளிலும் இதுபோன்றதொரு அரசியல் இல்லை.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு வழிகாட்டவேண்டும். நாங்கள் அந்த வழிகாட்டியாக இருக்க விரும்புகிறோம். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை பெற்றுக்கொடுப்பதற்கும் 200 ரூபாவுக்கு எரிபொருளை பெற்றுக்கொடுக்கவும் 40 சதவீதத்தால் மின்கட்டணத்தை குறைக்கவும் சம்பளத்தை இரு தடவைகள் அதிகரிக்கவும் அஸ்வெசுமவை 50000 ரூபாவால் அதிகரிக்கவும் நாங்களே ஜனாதிபதிக்கு வழிகாட்ட வேண்டும்.
அதனால், கடந்த காலங்களில் இருந்தது போன்ற எதிர்க் கட்சிக்கு பதிலாக மக்களுக்காக குரல்கொடுக்க கூடிய சகோதரத்துவத்துடன் கூடிய சகோதரர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்றார்.
நா.தினுஷா