Our Feeds


Monday, October 21, 2024

Zameera

அரசியல் உரிமைகளை வென்றெடுக்க கூடியவர்களுக்கே வாக்களிக்க வேண்டும்


 நமது நாளாந்த பொருளாதார மற்றும் வாழ்வியல் தேவைகள் என்றுமில்லாதவாறு மேலோங்கி நிற்கும் இவ்வேளையில் அவற்றை மட்டும் கருத்திற் கொள்ளாமல் நாம் இதுவரை காலமும் போராடி வந்த அரசியல் உரிமைகளை பாராளுமன்றம் ஊடாக வென்றெடுக்க கூடிய நபர்களுக்கே நாம் வாக்களிக்க வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு  இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை   தெரிவித்துள்ளார்.

 இலங்கை பாராளுமன்ற தேர்தல் (2024) தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயர், விடுத்திருக்கும் அறிக்கையில்  இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை நாட்டு மக்களாகிய நாம் மீண்டுமொரு தேர்தலை எதிர்நோக்கி நிற்கின்றோம். ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு இப்போது பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கின்றோம்.

பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. வடக்கு மாகாணத்தில் வன்னி தேர்தல் மாவட்டம் மற்றும் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம் என இரண்டிலும் சேர்த்து குறித்தொதுக்கப்பட்டுள்ள 12 ஆசனங்களுக்காக 45 அரசியல் கட்சிகளும் 46 சுயேச்சைக் குழுக்களும் களமிறங்கியுள்ளன. வேட்பாளர்கள் என்ற அடிப்படையில் 800க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து வருகின்ற இந்த நாடாளுமன்றத் தேர்தலானது இலங்கை முழுவதும் குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதியாகிய தமிழர் தாயகப் பகுதியில் பலத்த எதிர்பார்ப்புகள் நிறைந்த தேர்தலாக அமைந்துள்ளது.

உரிமை மறுப்புக்கு இலக்கான சிறுபான்மை மக்களாகிய நாம் நமது அனைத்து வகையான உரிமைகளையும் பெறுவதற்குரிய ஆகக்கூடிய வழிமுறை அரசியல் தான். இந்த அரசியல் பிரதி நிதிகளாக போட்டியிடுகின்ற அனைவரும் அதன் கனதியை உணர்ந்தவர்களா? என்பது கேள்விக்குறியே.

தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனைகள் நிறைந்த ஒரு காலகட்டத்தில் நாம் நிற்கின்றோம். ஜனாதிபதித் தேர்தலின்போது தெற்கில் ஏற்பட்ட அரசியல் சிந்தனை மற்றும் வடக்கு கிழக்கிலும் இந்தத் தேர்தலில் ஏற்பட வேண்டும் என்பது பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது.

அதேவேளையில் என்றுமில்லாதவாறு அதிக வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள இத்தேர்தல் பொதுமக்கள் மத்தியில் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதையும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதையும் வாக்காளர்கள் தமது கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.30 வருட அகிம்சைப் போராட்டமும் 30 வருட ஆயுதப் போராட்டமும் எதற்காக ஏற்பட்டனவோ அந்தக் காரணங்கள் இன்னும் தீர்க்கப்படாமலே உள்ளது. 

இந்நிலையில் நமது நாளாந்த பொருளாதார மற்றும் வாழ்வியல் தேவைகள் என்றுமில்லாதவாறு மேலோங்கி நிற்கும் இவ்வேளையில் அவற்றை மட்டும் கருத்திற்கொள்ளாமல் நாம் இதுவரை காலமும் போராடி வந்த அரசியல் உரிமைகளை பாராளுமன்றம் ஊடாக வென்றெடுக்க கூடிய நபர்களுக்கே நாம் வாக்களிக்க வேண்டும்.

தமிழ் மக்களாகிய நாம் நமது சுயநிர்ணய உரிமை உட்பட கால காலமாக நாம் வலியுறுத்தி வருகின்ற தமிழ் மக்களின் அடிப்படை கோட்பாடுகளை தொடர்ந்து முன்னகர்த்தி செல்லக்கூடியவர்களுக்கே நாம் வாக்களிக்க வேண்டும்.

உறவினர் ,  நண்பர் போன்ற வட்டங்களை கடந்து செயற்படக்கூடிய தமிழ்த்தேசியத்தை முன்னிலை படுத்தக்கூடிய இலஞ்ச ஊழலற்ற செயல்திறன் வாய்ந்த சொல்லுக்கும் செயலுக்கும் ஒத்திசைவுள்ள நபர்களுக்கே நாம் வாக்களிக்க வேண்டும்.

மாறிவரும் அரசியல் பொருளாதார சமூக சூழ்நிலைகளுக்கு ஏற்ப தேர்தல் தொடர்பான சமகால அரசியல் தொடர்பான நமது பார்வையிலும் கண்ணோட்டத்திலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.

ஒளிமயமானதொரு எதிர்காலத்தை நமக்குக் கொண்டுவரக்கூடிய ஒரு தீர்மானமிக்க தேர்தலாக இது அமைவதற்கு நாம் எல்லோரும் நமது வாக்குரிமையை பயன்படுத்துவோம். 

நமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் மிகுந்த பொறுப்புணர்வோடு செயல்படுவோம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தேர்தல் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »