ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான
அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் முதலாவது எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன எனக்கு எதிராக நீதிமன்றம் செல்ல வேண்டும் அல்லது பதவி துறக்க வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களை வெள்ளிக்கிழமை (25) சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்கள் அப்போதைய அரசாங்கத்தின் மீது கொண்டிருந்த அதீத வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் தான் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஆதரவளித்தார்கள்.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் இவ்விடயத்தை ஆராய்ந்து பார்த்திருந்தால் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்திருக்கமாட்டார்கள்.
தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டதை போன்று புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மகாநாயக்க தேரர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் நாட்டின் ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறைமை அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படும் என்பதை மக்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு அமெரிக்க தூதுவர் ஜுலி சங் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். ஆனால் தற்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் முதலாவது எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான குற்றவாளியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ரவி செனவிரத்ன மற்றும் சானி அபேசேகர ஆகியோருக்கு எதிராக விசாரணை அறிக்கையின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி அவர்களை பாதுகாப்பு தரப்பின் உயர் பதவிகளுக்கு நியமித்துள்ளார்.
இவ்வாறான பின்னணியில் தேசிய பாதுகாப்பு மீது நம்பிக்கை கொள்ள முடியாது என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தமது பிரஜைகளை அறுகம்குடா சுற்றுலா தலத்துக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளன.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மீது விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பற்றி விசாரணைகளை மேற்கொள்ள அரசாங்கம் தயாராகவில்லை.
மாறாக என்மீது சேறு பூசுகிறது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன எனக்கு எதிராக நீதிமன்றம் செல்ல வேண்டும் அல்லது பதவி துறக்க வேண்டும் என்றார்.